ADDED : பிப் 26, 2025 12:18 AM

- நமது நிருபர் -
பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் கடந்த 1997 ம் ஆண்டு பனசங்கரி அருகே ஹலகி வடேரஹள்ளி கிராமத்தில், இரண்டு ஏக்கர் நிலத்தை வளர்ச்சி பணிக்காக கையகப்படுத்தி இருந்தது. ஆனால் அங்கு வளர்ச்சி பணிகள் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 2006 - 2007 ம் ஆண்டு குமாரசாமி முதல்வராக இருந்த போது, பி.டி.ஏ.,வின் ஆட்சேபனையும் மீறி கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விடுவித்து உத்தரவிட்டார். அந்த நிலம் கடந்த 2010ல் தனியார் நிறுவனத்திற்கு 4.14 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்த நிறுவனத்திடம் பணம் வாங்கி கொண்டு, நிலத்தை சட்டவிரோதமாக விடுவித்ததாக குமாரசாமி மீது, சமூக ஆர்வலர் ஹிரேமத் அளித்த புகாரில் லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்தது.
முகாந்திரம்
இந்த வழக்கை எதிர்த்து, குமாரசாமி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணை தொடர அனுமதி கொடுத்தது.
இந்நிலையில் கடந்த 2018 - 2019 ல் குமாரசாமி முதல்வராக இருந்த போது வழக்கின் இறுதி அறிக்கை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து குமாரசாமி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் குற்றச்சாட்டுகளின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு, அறிக்கையை நிராகரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று உயர்நீதிமன்றம் கூறியது.
திருத்த சட்டம்
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ராஜேஷ் பிண்டல் அமர்வு விசாரித்தது. குமாரசாமி தரப்பு வக்கீல் முகுல் ரோகத்தகி தனது வாதத்தின் போது, கடந்த 2018 ம் ஆண்டு திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 19 ஐ மேற்கொள்காட்டி அரசின் முன் அனுமதி இன்றி விசாரணையை தொடர முடியாது என்று வாதிட்டார்.
அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரின் ராவல் வாதாடுகையில், '' கடந்த 2018 ம் ஆண்டு திருத்தத்தை, கடந்த கால குற்றங்களுக்கு பயன்படுத்த முடியாது,'' என்றார்.
இருதரப்பு வாதங்களுக்கும் முடிந்த நிலையில், நீதிபதிகள் நேற்று தீர்ப்பு கூறுகையில், அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். மேலும் குமாரசாமியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

