வெயிலால் 30 வரை அங்கன்வாடி மையங்களை மூட அரசு உத்தரவு
வெயிலால் 30 வரை அங்கன்வாடி மையங்களை மூட அரசு உத்தரவு
ADDED : ஜூன் 06, 2024 01:06 AM
புதுடில்லி:வெப்பச்சலனம் காரணமாக அங்கன்வாடி மையங்கள் வரும் 30ம் தேதி வரை மூடுவதற்கு டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் 10,897 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஆறு லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள், இந்த மையங்கள் மூலம் கூடுதல் ஊட்டச்சத்து உணவைப் பெறுகின்றனர்.
இவர்களில் 56,051 பாலுாட்டும் தாய்மார்கள், 65,726 கர்ப்பிணிகள், ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான, 3,61,712 குழந்தைகள், மூன்று முதல் ஆறு வயது வரையிலான 1,60,271 குழந்தைகள் அடங்குவர்.
தேசிய தலைநகரில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் தாய்மார்களும் பாதிக்கப்படலாம் என்பதற்காக, அங்கன்வாடி மையங்களை வரும் 30ம் தேதி வரை மூடுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வெயில் காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்படுவதால், சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே ஊட்டச்சத்து உணவு வகைகளை வினியோகிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக, மாநில அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு தினசரி உணவு வினியோகிக்கப்பட்டது குறித்த அறிக்கையை தனக்கு தாக்கல் செய்யும்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலருக்கு அமைச்சர் கைலாஷ் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.