* தினமும் தீ விபத்து கட்டடங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவு
* தினமும் தீ விபத்து கட்டடங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவு
ADDED : ஏப் 02, 2025 11:06 PM

புதுடில்லி,:கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு, தீ விபத்துக்களைத் தடுக்க மருத்துவமனை உட்பட அனைத்து கட்டடங்களிலும் ஆய்வு செய்ய, டில்லி அரசின் பொதுப்பணித் துறை உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர், துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறைக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:
டில்லி மாநகரில் தினமும் தீ விபத்துக்கள் ஏற்படுவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் தீ விபத்துக்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே,
பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து, ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட அனைத்துக் கட்டடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.
தீ எச்சரிக்கை கருவிகள், தெளிப்பான் கருவிகள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகள் போன்ற தீ தடுப்பு உபகரணங்கள் அனைத்துக் கட்டடங்களிலும் முறைப்படி பொருத்தப்பட்டுள்ளதைக் கண்காணிக்க வேண்டும். அந்தக் கருவிகள் செயல்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல, கட்டிடங்களில் அவசரகாலத்தில் வெளியேறும் வழிகள் இருப்பதையும் கவனமாக சரிபார்க்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீத்தடுப்பு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்புகளை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தீ விபத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆய்வு செய்யும் குழுவில் தீயணைப்பு பாதுகாப்பு வல்லுனர், பொறியாளர் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும். இந்த ஆய்வுப் பணிகளை வரும் 15ம் தேதிக்குள் முடித்து, விரிவான அறிக்கை மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த பரிந்துரை ஆகியவற்றை டில்லி தீயணைப்புத் துறை மற்றும் பொதுப்பணித் துறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டில்லி தீயணைப்புத் துறை இயக்குனர் அதுல் கார்க், கடந்த மாதம் பிறப்பித்திருந்த உத்தரவில், “மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், அலுவலக கட்டடங்களில் மின்சார ஒயரிங்கை ஆய்வு செய்து, தேவை எனில் புதிதாக ஒயரிங் செய்ய வேண்டும். தீ விபத்துகளில் 70 சதவீதம் தவறான மின் ஒயரிங்கால்தான் ஏற்படுகிறது,”என, கூறியிருந்தார்.