பரப்பன அக்ரஹாரா சிறையை மூன்றாக பிரிக்க அரசு திட்டம்
பரப்பன அக்ரஹாரா சிறையை மூன்றாக பிரிக்க அரசு திட்டம்
ADDED : ஆக 31, 2024 05:32 AM

பெங்களூரு: சர்ச்சைகளில் சிக்கி திணறும் பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையை, மூன்று சிறைகளாக பிரிக்க, மாநில அரசு ஆலோசிக்கிறது. இது குறித்து, இன்னும் சில நாட்களில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது.
பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியின் ஹொசா ரோட்டில் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை உள்ளது. இந்த சிறை, கைதிகளின் சொர்க்கம் என்ற அவப்பெயருக்கு ஆளாகி உள்ளது.
பணம் கொடுத்தால், கைதிகளுக்கு போதைப்பொருள், பீடி, சிகரெட், மொபைல் போன், பிரியாணி என தேவையான பொருட்கள் சிறைக்கு தேடி வரும் என்ற குற்றச்சாட்டு, பல ஆண்டுகளாக உள்ளது.
சொகுசு வசதி
இதற்கு முன் சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனைக்கு ஆளாகி, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த தமிழகத்தின் சசிகலாவுக்கு, தனியறை, சொகுசு வசதிகள் அளித்ததாக கூறப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், உயர் அதிகாரிகள் அவ்வப்போது சிறையில் திடீர் சோதனை நடத்தி, மொபைல் போன், போதைப் பொருள், கத்தி, சிம்கார்டு, சார்ஜர் போன்ற பொருட்களை பறிமுதல் செய்கின்றனர்.
ஆனால் சிறையில் இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதை தடுக்க முடியவில்லை.
சிறையில் அடைக்கப்பட்ட, செல்வாக்கு மிக்க சில ரவுடிகள், சிறையிலேயே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவங்களும் நடந்துள்ளன.
இப்போது ரேணுகாசாமி கொலை வழக்கில், கைதாகி சிறையில் உள்ள நடிகர் தர்ஷனுக்கு, சிறையில் ராஜ உபசாரம் நடப்பது அம்பலமானது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.
இது சிறையா அல்லது நட்சத்திர ஹோட்டலா என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர். எதிர்க்கட்சிகளும் விமர்சிக்கின்றன.
மெத்தனம்
முறைகேடுகளுக்கு கடிவாளம் போடும் நோக்கில், பரப்பன அக்ரஹாரா சிறையை மூன்றாக பிரிக்க, அரசு ஆலோசிக்கிறது.
ஏழெட்டு மாதங்களுக்கு முன்பே, இது குறித்து, மாநில அரசிடம் சிறைத்துறை வேண்டுகோள் விடுத்தது. இன்னும் அரசு பதிலளிக்கவில்லை.
நடிகர் தர்ஷன் சம்பவத்தால் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதால், சிறைத்துறை வேண்டுகோளுக்கு அரசு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது.
சிறையை மூன்றாக பிரிப்பது தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவிடம் கருத்து கேட்க, உள்துறை முடிவு செய்துள்ளது.
இன்னும் சில நாட்களில், உள் துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
காலி இடங்கள்
இதில் இறுதி முடிவு எடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஒப்புதல் அளித்தால், பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, கைதிகள், விசாரணை கைதிகள் மற்றும் மகளிர் கைதிகள் சிறை என, மூன்றாக பிரிக்கப்படும்.
சிறைத்துறை டி.ஜி.பி., மாலினி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையில், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், மகளிர் கைதிகள் என, மொத்தம் 5,300 கைதிகளை அடைக்கும் திறன் உள்ளது.
சிறையில் 800 அதிகாரிகள், ஊழியர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் பாதியளவு பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது சிறையில் 5,800 கைதிகள் உள்ளனர்.
ஊழியர்கள் பற்றாக்குறையால் மற்றவருக்கு, பணிச்சுமை ஏற்படுகிறது. இதனால் கைதிகளை கண்காணிக்க கஷ்டமாக உள்ளது. தற்போது கைதிகள், விசாரணை கைதிகள், பெண்களுக்கு தனி பிளாக்குகள் உள்ளன.
ஆனால் சமையல் அறை, மருத்துவமனை, கைதிகளை சந்திக்க வருவோர் அறைகள், ஒரே இடத்தில் உள்ளன.
சிறையை மூன்றாக பிரிந்தால், கைதிகளை கண்காணிக்க வசதியாக இருக்கும்.
மூன்று சிறைகளுக்கும் தனித்தனி அதிகாரிகள், ஊழியர்கள் இருப்பர். அந்தந்த சிறைகளுக்கு தனி சமையல் அறை, கைதிகள் சந்திப்பு அறை, மருத்துவமனை இருக்கும். தற்போதுள்ள மூன்று பிரிவுகளுக்கு நடுவே, பெரிய சுவர்கள் எழுப்பி, சிறைகளாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.