உட்கட்சி பூசலால் ஆட்சி கவிழும்: பசவராஜ் பொம்மை கணிப்பு
உட்கட்சி பூசலால் ஆட்சி கவிழும்: பசவராஜ் பொம்மை கணிப்பு
ADDED : மே 22, 2024 06:49 AM

கலபுரகி: ''உட்கட்சி பூசல் காரணமாக, விரைவில் கர்நாடக காங்கிரஸ் ஆட்சி கவிழும்,'' என்று பா.ஜ., முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கணித்துள்ளார்.
கர்நாடகா சட்ட மேலவையின், கர்நாடக வட கிழக்கு பட்டதாரி தொகுதிக்கு உட்பட்ட கலபுரகியில், பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சியின் ஓராண்டில், எந்த வளர்ச்சி பணிக்கும், அடிக்கல் நாட்டவில்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதி வழங்கவில்லை. வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல், மத்திய அரசை குற்றம் சாட்டினர்.
மாநிலத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளன. ரவுடிகள் அட்டகாசம், விரோத அரசியலுக்கு ஊக்கம் அளிப்பது, கல்வி தரம் குறைவு என அனைத்து துறைகளிலும் மாண்பு குறைந்து, குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பட்ஜெட்டில் அறிவித்த வளர்ச்சி பணிகள் செய்யவில்லை. திட்டங்கள் குறித்து ஆய்வும் செய்யப்படவில்லை.
இதனால், காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியில், 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுஉள்ளது.
மாநிலத்தில், முதல்வர் வேட்பாளர் யாரும் இல்லை என்று முதல்வரே கூறி உள்ளார். இதை பார்க்கும் போது, தலைவர்களிடையே கருத்து வேறுபாடு இருப்பது உறுதியாகி உள்ளது.
எனவே உட்கட்சி பூசல் காரணமாக, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழும். லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி கட்சிகள், 25 தொகுதிகளில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

