'என்னிடம் இருக்கும் பென்டிரைவ் வெளியானால் அரசு கவிழும்': குமாரசாமி
'என்னிடம் இருக்கும் பென்டிரைவ் வெளியானால் அரசு கவிழும்': குமாரசாமி
ADDED : மே 23, 2024 01:00 AM

மைசூரு : ''என்னிடம் இருக்கும் பென்டிரைவ் வெளியானால், அரசு கவிழ்ந்து விடும்'' என்று, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமி, மைசூரில் நேற்று அளித்த பேட்டி: ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கிறது என்பதால், எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் வேலையை, காங்கிரஸ் அரசு செய்கிறது. வரும் 30 ம் தேதி எம்.பி., பிரஜ்வலுக்கு எதிராக, ஹாசனில் பெரிய அளவில் போராட்டம் நடத்த, அழைப்பு விடுத்து உள்ளனர். அங்கன்வாடியில் பணியாற்றும், பெண்களை போராட்டத்திற்கு அனுப்ப, அதிகாரிகளிடம் கூறி உள்ளனர்.
சிடி தொழிற்சாலை
எம்.பி., பிரஜ்வலுக்கு ஆதரவாக, நான் இல்லை. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படட்டும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து, நாங்கள் போராட்டம் நடத்துவோம். பிரஜ்வல் பென்டிரைவ் வெளியானதன் பின்னணியில், பா.ஜ., பிரமுகர் தேவராஜேகவுடா, முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளனர்.
பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக்கை ஏன், இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 1980ல் காங்கிரசில், ஒரு பெரிய தலைவர் சிடி தொழிற்சாலை திறந்தார். அங்கிருந்து சிடி க்கள் தயாரிக்கப்படுகின்றன.
கதை கட்டுவர்
ஆட்சி, அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் இல்லை. எங்களுக்கு பதவி மீது ஆசை இல்லை. பதவிக்காக யாரையும் நாடவில்லை. ஹாசன் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேல் மூலம், காங்கிரஸ் எம்.பி., சுரேஷை, கார் டிரைவர் கார்த்திக் சந்தித்தார். அவரிடம் இருந்த பென்டிரைவில் இருந்து, வீடியோக்களை காபி செய்தனர்.
என்னிடமும் ஒரு பென்டிரைவ் உள்ளது. அது வெளியானால் அரசு கவிழும். இப்போது வெளியிட்டால் அது பொய் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கதை கட்டுவர். அந்த பென்டிரைவை, நேரம் வரும்போது வெளியிடுவேன். சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் சரண் அடையும்படி, பிரஜ்வலுக்கு மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுக்கிறேன். ரேவண்ணாவுடன், பிரஜ்வல் தொடர்பில் இல்லை. இவ்வாறு அவர்கூறினார்.

