மாநிலத்துக்காக அர்ப்பணிப்பு மக்களுக்கு கவர்னர் அழைப்பு
மாநிலத்துக்காக அர்ப்பணிப்பு மக்களுக்கு கவர்னர் அழைப்பு
ADDED : ஆக 15, 2024 07:33 PM
சிவில் லைன்ஸ்:மாநிலத்துக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும்படி, டில்லி மக்களுக்கு மாநில துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திர தினத்தை ஒட்டி, ராஜ்நிவாஸில் நேற்று தேசியக் கொடியை துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா ஏற்றிவைத்தார். அப்போது அவர் ஆற்றிய உரை:
மாநிலத்தின் நிலையான வளர்ச்சிக்காக துணை நிலை கவர்னர் அலுவலகம் பாடுபடுகிறது. மாநிலத்தின் நலனுக்காக தங்களை மாநில மக்கள் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், முழுமையான வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் பொறுப்பை உறுதிப்படுத்தவும் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அதற்கான உரிமையை சுதந்திரம் வழங்குகிறது.
நகரத்தின் வழியாக பாயும் யமுனை நதி அனைவருக்கும் சொந்தமானது. அதை துாய்மையாக வைத்திருப்பது, அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பு. மறுபுறம், இந்த முயற்சியில் அரசாங்கத்திற்கு உதவுவது எங்கள் பொறுப்பு.
பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அனைத்து வீரர்களுக்கும், இறுதிப் போட்டிக்கு முன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்களின் விதிவிலக்கான செயல்திறனால் இந்தியாவின் பெருமைக்கு பங்களிப்பு செய்துள்ளனர்.
நமது சுதந்திரத்திற்காக நாம் பெரும் விலை கொடுத்துள்ளோம். லட்சக்கணக்கான தேசபக்தர்கள் சுதந்திர இந்தியாவின் கதையை தங்கள் ரத்தத்தால் எழுதியுள்ளனர். அவர்களின் பெயர்களில் சில நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், இன்னும் பல லட்சக்கணக்கானவர்களின் பெயர்களை நாம் கேள்விப்பட்டிருக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தின் இந்த மாவீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்தும் நாள்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.

