எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி செலவினம் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு கவர்னர் உத்தரவு
எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி செலவினம் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு கவர்னர் உத்தரவு
ADDED : ஆக 15, 2024 08:26 PM
சிவில் லைன்ஸ்:கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணி, செலவு விபரங்களை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி, மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு துணை நிலை கவர்னர் மாளிகை உத்தரவிட்டுள்ளது.
துணை நிலை கவர்னர் மாளிகைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் அபிஷேக் தத் எழுதிய கடிதத்தில், 'ஆம் ஆத்மி அரசில் மாநில மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் கழிவுநீர் வடிகால் மற்றும் குடிநீர் குழாய்களை மேம்படுத்தவும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்படவில்லை. இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை பரிசீலித்த கவர்னரின் சிறப்பு செயலர், கடந்த 12ம் தேதி நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் சிறப்பு செயலர் கூறியிருப்பதாவது:
கடந்த 2023 - 24 மற்றும் 2024 - 25 நிதியாண்டுகளில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பல்வேறு பணிகளின் ஒருங்கிணைந்த பட்டியல், முன்னேற்ற அறிக்கைகள், தணிக்கை நடைமுறைகள், குறைகளை நிவர்த்தி செய்யும் முறை உள்ளிட்ட நிதியின் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கான வழிமுறை ஆகியவை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விபரங்களை ஐந்து நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கமிட்டி செயலர் அபிஷேக் தத் வரவேற்றுள்ளார். 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் அவர், 'சக்சேனாவின் கடிதம் பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வரும்' என கூறியுள்ளார்.
கவர்னர் மாளிகையின் இந்த நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி செலவீனங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதன் வாயிலாக, நகர மேம்பாட்டையும் முக்கியமான வளர்ச்சிப் பணிகளை முடக்கவும் துணை நிலை கவர்னர் அலுவலக சதி செய்வதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.