'முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு'
'முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு'
ADDED : ஆக 03, 2024 04:16 AM

பெங்களூரு : ''முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கவர்னருக்கு அதிகாரம் உள்ளது,'' என, சமூக ஆர்வலர் ஆபிரஹாம் தெரிவித்தார்.
பெங்களூரில் ஆபிரஹாம் நேற்று கூறியதாவது:
நான் கவர்னரை சந்தித்ததில் தவறு இல்லை. சட்டப்படி தான் கவர்னரை சந்தித்து புகார் அளித்தேன். ஒன்றரை மணி நேரம் அவருக்கு விளக்கம் அளித்தேன்.
முதல்வர் மீதான புகார் என்பதால், கவர்னர் என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன். முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஆனால், முதல்வர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. 'முறைகேடு நடக்கவில்லை, முதல்வருக்கு தொடர்பு இல்லை' என துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். அவர் அளவுக்கு நான் படிக்கவில்லை. முறைகேடு நடந்திருப்பது உண்மை. ஆவணங்களை இணைத்துள்ளேன்.
யாரும் எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. இதில், அரசியல் இல்லை. தேவை எனில் விசாரணை நடத்திக் கொள்ளட்டும். என்னுடன், பா.ஜ., - ம.ஜ.த., காங்கிரஸ் என, எந்த கட்சித் தலைவர்களும் பேசவில்லை. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக, மாநில அரசு, கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில், என் பெயர் குறிப்பிட்டு உள்ளனர். இதுகுறித்து, தலைமைச் செயலரிடம் விளக்கம் கேட்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.