அரசியலமைப்புக்கு உட்பட்டு கவர்னர்கள் செயல்பட வேண்டும்: நீதிபதி நாகரத்னா
அரசியலமைப்புக்கு உட்பட்டு கவர்னர்கள் செயல்பட வேண்டும்: நீதிபதி நாகரத்னா
ADDED : மார் 31, 2024 11:33 PM

ஹைதராபாத்: ''கவர்னர் பதவி என்பது, அரசியலமைப்பின் முக்கியமான பதவி. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, கவர்னர்கள் நடந்து கொள்ள வேண்டும்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்து உள்ளார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் உள்ள, 'நல்சார்' சட்டப் பல்கலையில், 'நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா உரையாற்றினார்.
அப்போது, கவர்னர் செயல்பாடுகள் குறித்து நீதிபதி பேசியதாவது:
சமீப காலத்தில் மாநில கவர்னர்கள், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மற்றும் தங்களின் பிற நடவடிக்கைகளால் உச்ச நீதிமன்ற வழக்குகளில் வருகின்றனர். இது ஆரோக்கியமான போக்கு அல்ல.
பண மதிப்பு
கவர்னர் பதவி என்பது ஒரு முக்கியமான அரசியலமைப்பு பதவி. இதைத் தான் செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என கவர்னர்கள் கூறுவது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி, கவர்னர்கள் தங்கள் கடமைகளை செய்தால், நீதிமன்றங்களில் இது போன்ற வழக்குகள் குறையும். எனவே, அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் என, தற்போது சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான வழக்கில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, 4:1 தீர்ப்பின் அடிப்படையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியானதே என தீர்ப்பளித்தது. இதில், 'பண மதிப்பு நீக்க நடவடிக்கை சட்ட விரோதமானது' என, தீர்ப்பளித்தவர் நீதிபதி பி.வி.நாகரத்னா.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மாறுபட்ட தீர்ப்பு அளித்தது குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கூறியதாவது:
கடந்த 2016ல் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில், 86 சதவீத நோட்டுகள் 500 - 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன.
நடவடிக்கை
பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து அப்போதைய நிதி அமைச்சருக்கு கூடத் தெரியாது என்கின்றனர். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 98 சதவீத ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்து விட்டன.
அப்படியானால், கருப்பு பணத்தை ஒழிக்க இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை பயன்பட்டது என்று எப்படி கூற முடியும்?
இந்த நடவடிக்கைக்குப் பின், வருமான வரி நடவடிக்கைகள் என்ன ஆனது என்பதும் தெரியாது. இந்த நடவடிக்கை, சாதாரண மக்களையே நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அது தொடர்பான வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு அளித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
