கட்சி அலுவலகமான கவர்னர் ஆபீஸ்; காங்., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
கட்சி அலுவலகமான கவர்னர் ஆபீஸ்; காங்., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : ஆக 30, 2024 09:52 PM

ஹூப்பள்ளி : ''முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு, கவர்னர் அனுமதி அளித்துள்ளார். கவர்னர் அலுவலகத்தை, கட்சி அலுவலகமாக பா.ஜ., பயன்படுத்துகிறது,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சரத் பச்சேகவுடா குற்றஞ்சாட்டினார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பா.ஜ.,வினர் ராஜ்பவனை, கட்சி அலுவலகமாக பயன்படுத்துகின்றனர். சிறு, சிறு புகார்களுடன் கவர்னரை சந்திப்பதை கவனித்தால், கவர்னர் அலுவலகம், கலாசிபாளையா போலீஸ் நிலையத்தை விட, மோசமாகிவிட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
'மூடா' ஊழலில் முதல்வர் சித்தராமையாவின் பங்களிப்பு இல்லை. அவரது ஒரு கையெழுத்தும் இல்லை. வழக்கில் 19 பேரின் பெயர்கள் இருந்தாலும், அவர்களை விட்டு விட்டு சித்தராமையாவை குறிவைத்திருப்பது, அரசியல் சதி.
மூடா முறைகேட்டில் காங்கிரசாருக்கு பங்களிப்பு இருப்பதாக கூறும், பா.ஜ., குற்றச்சாட்டில் உண்மை இல்லை. முதல்வருக்கு பக்கபலமாக, கட்சி மேலிடமும், எம்.எல்.ஏ.,க்களும் இருக்கின்றனர். மாநில மக்களும், முதல்வருக்கு ஆதரவாக உள்ளனர். பிற்படுத்தப்பட்ட தலைவரின் முகத்தில் கரியை பூசும் வேலையை, பா.ஜ., செய்கிறது.
தற்போது கவர்னரின் அலுவலகத்துக்கும், பா.ஜ., அலுவலகத்துக்கும் எந்த வித்தியாசமும் தென்படவில்லை. பா.ஜ.,வின் பாதயாத்திரையை விட, காங்கிரசின் மக்கள் இயக்கம் மாநாட்டுக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்தனர். ஆனால் பா.ஜ.,வினர் பொய்யான தகவல் பரப்புகின்றனர். சித்தராமையா ராஜினாமா செய்யும் சூழ்நிலை ஏற்படாது.
இவ்வாறு அவர்கூறினார்.