கர்நாடகாவில் கவர்னர் ஆட்சி எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்
கர்நாடகாவில் கவர்னர் ஆட்சி எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்
ADDED : ஆக 19, 2024 10:55 PM

பெங்களூரு:
''ஆளுங்கட்சியே போராட்டம் நடத்துவதால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காங்கிரசார் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். உடனடியாக கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்,'' என, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் வலியுறுத்தினார்.
'மூடா' முறைகேட்டில், முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்தார்.
எனவே, சித்தராமையா, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் அக்கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாநில காங்கிரஸ் அரசின் முறைகேடுகளை கண்டித்தும், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் பா.ஜ.,வினர் கோஷம் எழுப்பினர். எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
விஜயேந்திரா பேசியதாவது: ஊழல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. மூடா முறைகேடு, வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு என, மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகின்றனர்.
எதிர்ப்பு கோஷம்
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், முறைகேடு நடந்திருப்பது உண்மை என்று முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார். மூடா முறைகேட்டில், 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகளை, முதல்வர் விழுங்கி உள்ளார்.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அடம் பிடித்து பதவியில் நீடிக்கிறார். கவர்னரை குற்றஞ்சாட்டாமல் ராஜினாமா செய்ய வேண்டும்.
ஊழல்வாதிகளால், ஊழலுக்காக, ஊழல்வாதிகளுக்காக காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கட்சி மேலிடம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தன்னை காப்பாற்றுவர் என்ற கனவில் இருந்து, முதல்வர் வெளியே வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசியதாவது: கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த சித்தராமையா, முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும். சட்டசபையில் பதில் அளிக்காமல், தப்பியோடி விட்டார்.
சட்டம் - ஒழுங்கு
ஆளுங்கட்சியே போராட்டம் நடத்துவதால், மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காங்கிரசார் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்கின்றனர். எனவே, உடனடியாக கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
எடியூரப்பா, ஜார்ஜ் பெர்னாண்டஸ், அத்வானி, ராமகிருஷ்ண ஹெக்டே ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுந்த போதும், அவர்கள் ராஜினாமா செய்தனர்.
இவ்வாறு அவர் பேசினார்.