சிறுவனின் ரத்த மாதிரியை குப்பையில் வீசி கோல் மால் செய்த அரசு டாக்டர்கள் கைது :புனே விபத்து
சிறுவனின் ரத்த மாதிரியை குப்பையில் வீசி கோல் மால் செய்த அரசு டாக்டர்கள் கைது :புனே விபத்து
ADDED : மே 28, 2024 12:40 AM

புனே, மஹாராஷ்டிராவில் குடி போதையில் சொகுசு கார் ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை குப்பை தொட்டியில் வீசி விட்டு, வேறு ஒருவரின் ரத்த மாதிரியை சோதனை செய்து அறிக்கையை மாற்றி மோசடியில் ஈடுபட்ட இரண்டு டாக்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்கு பதிவு
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் சமீபத்தில் சொகுசு கார் மோதி ஐ.டி., ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
விசாரணையில், காரை ஓட்டியது ரியல் எஸ்டேட் அதிபர் விஷால் அகர்வாலின், 17 வயது மகன் வேதாந்த் என்பதும், அவர் குடி போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிந்தது. அவருடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், மைனர் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் அச்சிறுவனை ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பல்வேறு நிபந்தனைகளுடன் சிறுவனுக்கு ஜாமின் வழங்கினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் போலீசார் மேல்முறையீடு செய்ததில், அச்சிறுவனை சிறார் சீர்திருத்த இல்லத்தில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே கடந்த 21ம் தேதி, விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மற்றும் சிறுவர்களுக்கு மது வழங்கிய இரண்டு மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, காரை ஓட்டியதாக போலீசாரிடம் ஒப்புக்கொள்ளும்படி, தங்கள் வீட்டு கார் டிரைவரை மிரட்டிய வழக்கில் அச்சிறுவனின் தாத்தாவையும் சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, வழக்கு விசாரணையின் போது விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரி பரிசோதனையில், அவர் மது அருந்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.
விசாரணை
இந்நிலையில், அந்த பரிசோதனை அறிக்கை அச்சிறுவனுடையது அல்ல என்பது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் கூறியதாவது:
புனே அரசு மருத்துவமனையான சசூன் மருத்துவமனையில் சிறுவனுக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.
ஆனால், அவற்றை குப்பை தொட்டியில் வீசி விட்டு, வேறு ஒருவரின் மாதிரியை போலீசாருக்கு அனுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக, விசாரணை நடத்தியதில், அங்கு தடயவியல் ஆய்வுக்கூடத்தின் தலைவராக உள்ள டாக்டர்கள் அஜய் தவாடே மற்றும் ஸ்ரீஹரி ஹல்னுார் ஆகியோர் சிறுவனின் ரத்த பரிசோதனை அறிக்கையை மாற்றி அளித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சிறுவனின் தந்தை விஷால் அகர்வாலிடம், அவர்கள் மொபைல்போனில் பேசியதும் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்கள் இருவரையும் நாங்கள் கைது செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.