நேஹா கொலையாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க அரசு சிபாரிசு?
நேஹா கொலையாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க அரசு சிபாரிசு?
ADDED : ஏப் 25, 2024 03:52 AM

ஹூப்பள்ளி, : “நேஹாவை கொலை செய்த கொலையாளிக்கு துாக்கு தண்டனை விதிக்கும்படி சிபாரிசு செய்ய, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது,” என, மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் வசிக்கும் நிரஞ்சன் ஹிரேமத், கீதா தம்பதியின் மகள் நேஹா, சில நாட்களுக்கு முன்பு கல்லுாரி வளாகத்திலேயே, பயாஜ் என்பவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சித் தலைவர்கள் என, பலரும் இந்த கொலையை கண்டித்தனர்.
கொலையாளியை கடுமையாக தண்டிக்கும்படி, பா.ஜ., நேற்று போராட்டம் நடத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலர், நேஹாவின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
மாநில காங்., பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலுடன், நேற்று நேஹாவின் வீட்டுக்குச் சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
அப்போது சுர்ஜேவாலா கூறியதாவது:
உங்கள் மகள் கொலைக்கு நீதி கிடைக்கும். எந்த காரணத்தை கொண்டும், நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
மாநில அரசு உங்களுடன் உள்ளது. உங்கள் மகள் கொலை தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவிடம் பேசினேன்.
தற்போது இந்த வழக்கு சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்துள்ளது.
விசாரணையை 120 நாட்களில் முடிக்க அரசு ஆலோசிக்கிறது. கொலையாளிக்கு துாக்கு தண்டனை விதிக்கும்படி, சித்தராமையா அரசு சிபாரிசு செய்யும்.
இவ்வாறு அவர் உறுதி அளித்தார்.

