தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அரசு பள்ளி வகுப்பறைக்கு பூட்டு
தலைமை ஆசிரியரை மாற்ற கோரி அரசு பள்ளி வகுப்பறைக்கு பூட்டு
ADDED : மே 30, 2024 06:36 AM

பெலகாவி: பள்ளி திறக்க இருந்த நிலையில், தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி, முதல் நாளே, பள்ளி மேம்பாட்டு கண்காணிப்பு கமிட்டி உறுப்பினர்கள், வகுப்பறைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
பெலகாவி மாவட்டம், தங்கடி கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது. இதன் தலைமை ஆசிரியராக சவுகலே என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவருக்கும், எஸ்.டி.எம்.சி., எனும் பள்ளி மேம்பாட்டு கண்காணிப்பு கமிட்டி உறுப்பினர்களுக்கும் பரஸ்பரம் புரிதல் இல்லை.
இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு வந்த இக்குழுவினர், ஒரு வகுப்பறைக்கு பூட்டுப் போட்டனர்.
அப்போது அவர்கள், 'பள்ளி தலைமை ஆசிரியர், ஒழுங்காக பள்ளிக்கு வருவதில்லை; ஒழுங்காக பணியும் செய்வதில்லை. அவரை மாற்றும்படி டி.டி.பி.ஐ., எனும் பொது உத்தரவு துணை இயக்குனர் அலுவலகத்துக்கும், பிளாக் கல்வி அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எங்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை' என கூறினர்.
அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், பெற்றோர், செய்வது அறியாது திகைத்து நின்றனர். இதுதொடர்பாக, துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த அதிகாரிகள், கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பூட்டிய வகுப்பறையை கண்காணிப்பு கமிட்டியினர் திறந்தனர். மாணவர்களும் வகுப்பறைக்கு சென்று பாடம் படித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வகுப்பறைக்கு பூட்டுப் போட்ட பள்ளி மேம்பாட்டு கண்காணிப்பு கமிட்டியினர். இடம்: பெலகாவி.