ADDED : ஜூலை 06, 2024 06:25 AM

பெங்களூரு: காவிரி நீர் அசுத்தமடைவதை கட்டுப்படுத்த, மாற்று வழிகளை கண்டறிய ஆய்வு நடத்த, மாநில அரசு கமிட்டி மைத்துள்ளது. ஜூலை 9க்குள் அறிக்கை அளிக்கும்பபடி உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆறு கர்நாடக மக்களின் ஜீவ நதியாகும். காவிரி ஆறு நாளுக்கு நாள் அசுத்தமடைகிறது.
சாக்கடை நீர், தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பதே இதற்கு காரணம். இது தொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.சி., தினேஷ் கூலிகவுடா, மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
'காவிரி ஆற்றில் சாக்கடை நீர், திடக்கழிவுகள், தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலந்து, தண்ணீர் அசுத்தமடைகிறது. சுற்றுச்சூழலும் பாழாகிறது.
'நீர் வாழ் உயிரினங்கள், ஆற்றின் நீரை நம்பியுள்ள மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லுனர் கமிட்டி அமைக்க வேண்டும்' என கோரியிருந்தார்.
இவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வனத்துறை, கமிட்டி அமைத்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாசுக் கட்டுப்பாடு உயர் அதிகாரி நிரஞ்சன் தலைமையில் கமிட்டி அமைத்துள்ளது. ஜூலை 9க்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
மைசூரின் காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன் பொறியாளர், கர்நாடக குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் ஆணைய பொறியாளர், மைசூரு மாநகராட்சி பொறியாளர், சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வக பிரிவு தலைவர் உட்பட பலர் கமிட்டியில் உள்ளனர்.