அதிகாலை 1 மணி வரைதான் மது விற்கணும் மீறினால் நடவடிக்கை என அரசு எச்சரிக்கை
அதிகாலை 1 மணி வரைதான் மது விற்கணும் மீறினால் நடவடிக்கை என அரசு எச்சரிக்கை
ADDED : ஆக 21, 2024 09:05 PM
புதுடில்லி:நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குப் பின் மதுபானம் விற்பனை செய்யும் ஹோட்டல், கிளப் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, டில்லி கலால் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்து கலால் உரிமதாரர்களும் டில்லி கலால் விதிமுறை 2010ன் விதி 55(1)ஐப் பின்பற்ற வேண்டும். நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமெ மது விற்பனை செய்ய வேண்டும்.
கலால் துறை அமலாக்கக் குழுக்கள் சோதனை நடத்தியதில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்றது தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுவது டில்லி அரசின் கலால் சட்டம் 2009 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றம்.
மதுபானம் வழங்கும் கிளப்புகள் மற்றும் ஹோட்டல்கள் அதிகாலை 1:00 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய வெண்டும்.
முன்னதாக, புதிய கலால் கொள்கையில் நேரம் அதிகாலை 3:00 மணி வரை அதிகரிக்க முன்மொழியப்பட்டது. பின், அந்தக் கொள்கை ரத்து செய்யப்பட்டு விட்டது.
சட்டம்--ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு மேல் ஹோட்டல், கிளப் ஆகியவற்றில் மதுபானம் விற்பதை அனுமதிக்கும் முன்மொழிவுக்கு டில்லி மாநகரப் போலீசும் கடந்த காலத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.
அதேபோல, மது விற்பனை உரிமம் பெற்ற வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு அவை எப்போதும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். அமலாக்க குழு சோதனை நடத்த வரும்போது கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்வர். மது விற்பனை உரிமம் பெற்றவர்களின் விதிமுறை மீறல்களை கண்டுபிடிக்கும்போது, கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகள் கிடைக்காததால் உண்மை நிலையை சரிபார்ப்பது கடினம்.
விதிமுறையை மீறி, நிர்ணையிக்கப்பட்ட நேரத்துக்குப் பின் மது விற்கும் ஹோட்டல் மற்றும் கிளப் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.