'கிரஹலட்சுமி' திட்ட பணம் புதிய தேர் கட்டுவதற்கு நன்கொடை
'கிரஹலட்சுமி' திட்ட பணம் புதிய தேர் கட்டுவதற்கு நன்கொடை
ADDED : செப் 06, 2024 06:07 AM

கதக்: கிரஹலட்சுமி திட்டத்தின் மூலம் கிடைத்த 2,000 ரூபாயை, கோவிலின் புதிய தேர் கட்டுவதற்கு பெண்கள் நன்கொடையாக வழங்கினர்.
கிரஹலட்சுமி திட்டத்தின் மூலம், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகையை, அரசு வழங்குகிறது. நான்கு, ஐந்து மாதங்களாக கிரஹலட்சுமி திட்ட பணம் வரவில்லை என்று, அரசு மீது பெண்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில், பணம் சரியாக வருகிறது என்று பெண்கள் கூறுகின்றனர்.
கிரஹலட்சுமி திட்டப் பணத்தில், பெண் ஒருவர் குளிர்சாதன பெட்டி வாங்கியது; மூதாட்டி ஒருவர் 200 பேருக்கு அன்னதானம் வழங்கியது; மாமியார் ஒருவர் மருமகளுக்கு கடை வைத்துக் கொடுத்த செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில், கதக் மாவட்டம், ரோன் தாலுகா சோமனஹட்டி கிராமத்தில் வசிக்கும் பெண்கள், தங்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வருகிறது என்கின்றனர். இதுவரை 11 மாத பணம் சரியாக வந்துவிட்டது. இந்த மாதம் வரும் பணத்தை, கிராமத்தில் உள்ள சரணபசவேஸ்வரர் கோவிலுக்கு, புதிய தேர் கட்டுவதற்கு கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்று சமீபத்தில் கூறினர்.
நேற்று கோவிலுக்குச் சென்ற 50க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களுக்கு கிரஹலட்சுமி திட்டத்தில் கிடைத்த 2,000 ரூபாயை, கோவிலுக்கு புதிய தேர் கட்ட வழங்கினர். அதற்கான ரசீதும் பெற்றுக் கொண்டனர்.