'கிரஹலட்சுமி' பணத்தை சேமித்து 200 பேருக்கு மூதாட்டி உணவு
'கிரஹலட்சுமி' பணத்தை சேமித்து 200 பேருக்கு மூதாட்டி உணவு
ADDED : ஆக 25, 2024 09:52 PM

பெலகாவி:
கிரஹலட்சுமி திட்டத்தின் மூலம், மாதந்தோறும் கிடைக்கும் 2,000 ரூபாய் பணத்தை சேமித்து வைத்து, ஊர் திருவிழாவின் போது 200 பேருக்கு, மூதாட்டி உணவு வழங்கி உள்ளார்.
கர்நாடகாவில் கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பணத்தை சேமித்து வைத்து, சில பெண்கள் குளிர்சாதன பெட்டி வாங்கி இருந்தனர்.
ஆனால் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக 2,000 ரூபாய் உதவித்தொகை வரவில்லை என்று, பெரும்பாலான மாவட்ட பெண்கள் அரசு மீது குற்றம் சாட்டி இருந்தனர்.
இந்நிலையில், பெலகாவியின் ராய்பாக் சுத்தட்டி கிராமத்தை சேர்ந்த அக்கதாயி லங்கோடி, 60 என்ற மூதாட்டி, கிரஹலட்சுமி திட்டத்தின் மூலம் கிடைத்த 2,000 ரூபாயை சேமித்து வைத்து, நேற்று முன்தினம் நடந்த ஊர் திருவிழாவின் போது 200 பேருக்கு உணவு வழங்கி உள்ளார்.
தனது வயதுடைய ஐந்து முதியவர்களுக்கு, புதிய உடைகளும் வாங்கி கொடுத்து அசத்தி உள்ளார்.
''சித்தராமையா மாதம் 2,000 ரூபாய் தருகிறார். அரசியலில் அவர் இன்னும் உயர வேண்டும்.
''இப்போது அவர் ஏதோ பிரச்னையில் சிக்கி இருப்பதாக சொல்கின்றனர். அந்த பிரச்னையில் இருந்து, அவர் விடுபட வேண்டும்,'' என்று, அக்கதாயி லங்கோடி கூறினார்.