ADDED : செப் 01, 2024 11:23 PM
பெங்களூரு: 'கிரஹலட்சுமி' திட்டத்தின் பயனாளிகள், ரீல்ஸ் செய்தால் பரிசளிப்பதாக மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அறிவித்துள்ளார்.
கிரஹலட்சுமி திட்டத்தை அமல்படுத்தி, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை நினைவு கூரும் வகையில், திட்டத்தின் பயனாளிகளான பெண்களுக்கு, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் புதிய சலுகையை அறிவித்துள்ளார்.
கிரஹலட்சுமி திட்டத்தினால், தங்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து, யு டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளும்படி, அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'இளம்பெண்கள் இத்திட்டம் தொடர்பாக, ரீல்ஸ் வீடியோவும் பதிவு செய்யலாம். செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை ரீல்ஸ்களை பகிர்ந்து கொள்ளலாம். அதிகமான பார்வையாளர்கள் கிடைத்த பெண்களுக்கு தனிப்பட்ட முறையில், ஒரு பரிசு வழங்கப்படும்' என, அறிவித்துள்ளார்.