ADDED : ஆக 10, 2024 06:23 AM
பெங்களூரு: புதிய பி.ஜி.,க்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
கர்நாடக தலைநகரான பெங்களூருக்கு பணிநிமித்தமாக வரும் மற்ற மாவட்டத்தினர், வெளிமாநிலத்தினர் பி.ஜி., எனும் தங்கும் விடுதிகளில் தங்குகின்றனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பி.ஜி.,க்கள் செயல்பட்டு வருகின்றன.
புதிதாக துவங்கும் பி.ஜி.,க்களுக்கான 10 வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநகராட்சியின் தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று வெளியிட்டார்.
l பி.ஜி.,க்களின் அனைத்து நுழைவு, வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும். கேமராக்களில் பதிவான காட்சிகளின் தரவுகளை பாதுகாக்க வேண்டும்
l பி.ஜி.,யில் தங்குபவர்கள் குறைந்தது 70 சதுர அடியில் வசிக்கும் வகையில், இடம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
l பி.ஜி.,யில் தங்குபவர்களுக்கு சுத்தமான குளியல் அறைகள், கழிப்பறைகள் வழங்கப்பட வேண்டும்
l சுத்தமான குடிநீர் வழங்குவதுடன், அரசு விதிமுறைப்படி எவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டுமோ, அதை கட்டாயமாக கொடுக்க வேண்டும்
l விடுதியில் தங்குபவர்கள் சொந்தமான சமையல் செய்ய, சமையல் அடுப்பை பயன்படுத்தினால், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்
l பி.ஜி.,யில் தங்குபவர்கள் பாதுகாப்புக்காக, 24 மணி நேரமும் காவலாளிகள் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
l தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தீயணைப்பு துறையிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்
l பி.ஜி.,க்கள் நுழைவுவாயிலில் அவசர சேவைக்கு தொடர்பு கொள்ள, மாநகராட்சியின் உதவி எண் 1533, காவல்துறை உதவி எண் 101 ஆகியவற்றை பலகையில் எழுத வேண்டும்
l முதலுதவி பெட்டிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்
l பி.ஜி.,க்களில் சேகரமாகும் குப்பையை அகற்ற, போதுமான ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேற்கண்ட வழிகாட்டுதல்களை பி.ஜி., நிர்வாகம் கட்டாயம் பின்பற்றுகிறதா என்பதை, மண்டல மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். வழிகாட்டுதல்களை மீறும் பி.ஜி., நிர்வாகம் மீது, பெங்களூரு மாநகராட்சி சட்டம் 2020ன் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

