குப்த லிங்கேஸ்வரா கோவில் ஊற்று நீர் செய்யும் அற்புதம்
குப்த லிங்கேஸ்வரா கோவில் ஊற்று நீர் செய்யும் அற்புதம்
ADDED : ஆக 05, 2024 09:46 PM

கர்நாடகா -- தெலுங்கானா மாநில எல்லையில் உள்ளது, பீதர் மாவட்டம். குடிநீர் தட்டுப்பாடு அதிகம் நிலவும் இம்மாவட்டத்தில், எந்த நேரமும் பாறைக்குள் இருந்து தண்ணீர் வரும் அதிசய கோவில் உள்ளது. இக்கோவிலை பற்றி பார்க்கலாம்.
பீதர், பால்கி கானாபுரா கிராமத்தில் உள்ளது குப்தலிங்கேஸ்வரா கோவில். இந்த கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகாவின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான ஆந்திரா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
அமாவாசை, மஹா சிவராத்திரி அன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். கோவிலுக்குள் பாறை ஊற்று உள்ளது. கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் வறட்சி நிலவினாலும், ஊற்றில் இருந்து மட்டும் தொடர்ந்து தண்ணீர் வரும்.
இதன் அதிசயம் என்னவென்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியவில்லை.
ஊற்றுத் தண்ணீரை குடித்தால், தோல் சம்பந்தமான பிரச்னை உட்பட அனைத்து விதமான நோய்களும் சரியாகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பாத்திரங்களில் ஊற்று தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.ஊற்றில் இருந்து வரும் தண்ணீரை பிடித்து, கோவிலை சுற்றியுள்ள இடங்களில், பாத்திரங்களில் வைக்கின்றனர். அந்த தண்ணீரை குடித்து பறவைகள் தாகம் தீர்க்கின்றன.
கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் வறட்சி நேரத்தில், கோவிலுக்கு வந்து ஊற்றில் இருந்து வரும் தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.
பெங்களூரில் இருந்து பால்கி 728 கி.மீ., துாரத்தில் உள்ளது. பஸ், ரயில், விமான வசதி உள்ளது. தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
--- நமது நிருபர் - -