பெங்களூரில் ஆலங்கட்டி மழை: தண்ணீர் தேங்கியதால் அவதி
பெங்களூரில் ஆலங்கட்டி மழை: தண்ணீர் தேங்கியதால் அவதி
ADDED : மே 07, 2024 05:40 AM

பெங்களூரு : பெங்களூரு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. நகரில் ஏராளமான இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
பெங்களூரு உட்பட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. கடந்த வாரம் இரண்டு நாட்கள், பெங்களூரு, கோலார், மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர், குடகு உட்பட காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது.
அதன்பின், தொடர்ந்து பெய்யும் வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் பெய்யவில்லை. ஆனால், நேற்று மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.
அதுவும் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
ராஜாஜிநகர், கே.ஆர்.மார்க்கெட், மெஜஸ்டிக், சாந்திநகர், பேட்ராயனபுரா, பசவேஸ்வரநகர், சதாசிவநகர், மத்திகெரே, பத்மநாபநகர், பனசங்கரி, பசவனகுடி, கே.ஆர்.புரம், கெங்கேரி, கத்ரிகுப்பே, காமாக்யா, கதிரேனஹள்ளி, சிக்கலு சந்திரா, விதான் சவுதா சுற்று வட்டார பகுதிகள் உட்பட நகரின் பல பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், ஓக்லிபுரம், சாளுக்கியா சதுக்கம், ராமமூர்த்திநகர், காவிரி சதுக்கம், பி.ஜி.ஹள்ளி, ஹென்னுார் உட்பட பல பகுதிகளில் உள்ள சுரங்க பாலங்களில், மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் ஓட்ட முடியாமல் பலரும் தவித்தனர்.
ஜெயநகர், மல்லேஸ்வரம், கோரமங்களா, பி.டி.எம்.லே - அவுட், யஷ்வந்த்பூர் உட்பட பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன என்று பெங்., மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தன.
நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
ஓசூர் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் பொம்மசந்திராவில் இருந்து, அத்திப்பள்ளி வரை நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மல்லேஸ்வரம் செல்லும் மந்த்ரிமால் சாலை வெள்ளக்காடாக மாறியது. அங்கும், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதுபோன்று, பெங்., ரூரல், கோலார், சிக்கபல்லாப்பூர், மாண்டியா, சாம்ராஜ்நகர், குடகு, மைசூரு, ராம்நகர், துமகூரு உட்பட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்தது. இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்கவயல்
தங்கவயலில் நேற்று மாலை மேகமூட்டமாக காணப் பட்டது. இரவு 8:30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 9.30 மணி வரை பலத்த காற்றுடன் பெய்தது.
உரிகம் என்.டி.பிளாக், அம்பேத்கர் சாலை, 4 வது பிளாக், உரிகம் பேட்டை, கில்பர்ட்ஸ், கென்னடிஸ், ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன் பேட்டை பகுதிகளில் வெள்ளம் புரண்டோடியது.
தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தட்டு முட்டு சாமான்களில் மழைநீரை பிடித்து வெளியேற்றினர். மழை நேரத்தில் மின் தடை செய்யப் பட்டதால் நகரமே இருண்டது. சாலைகள்வெறிச்சோடின.