ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹம்பி யந்த்ரோதாராகா கோவில்
ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹம்பி யந்த்ரோதாராகா கோவில்
ADDED : மே 09, 2024 09:32 PM

ராமாயண காலத்தில் சீதாதேவியை, ராவணன் இலங்கைக்கு கடத்தி சென்றார். அங்கு சென்று சீதாதேவியை மீட்டு வர ராமனுக்கு பெரிதும் உதவியாக இருந்தவர் ஹனுமன். ராமர் கோவில் இருக்கும் இடங்களில் எல்லாம், ஹனுமன் சிலையும் கண்டிப்பாக இருக்கும். ஹனுமனுக்கு என்று தனி கோவில்களும் உள்ளன.
கர்நாடகாவின் கொப்பால் மாவட்டம், கங்காவதி அஞ்சனாத்ரி மலைக்கும் ஹனுமன் வந்து சென்றதாக வரலாற்று புராணங்கள் கூறுகின்றன.
இதனால், அஞ்சனாத்ரியில் ஹனுமன் கோவில் கட்டப்பட்டு உள்ளது. பக்தர்கள் அங்கு சென்று ஹனுமனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதுபோல யந்த்ரோதாராகா என்ற கோவிலும், ஹனுமனுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ஹம்பியில் தான் யந்த்ரோதாராகா கோவில் உள்ளது.
இந்த கோவிலை விஜயநகர பேரரசின் ராஜகுருவான ஸ்ரீ வியாசராஜரால் கட்டப்பட்டது. கோவிலை கட்டி முடித்து, ஹனுமனுக்கு அர்ப்பணித்தார்.
ஸ்ரீவியாசராஜர் தினமும் பூஜை செய்வதற்கு முன்பு, கோவிலில் உள்ள பாறைகளில் ஹனுமன் படத்தை வரைந்ததாகவும், பூஜை முடிந்ததும் பாறையில் வரையப்பட்ட ஹனுமன் படம் மறைந்து விடும் என்றும் புராணங்கள் கூறுகின்றனர்.
ராமரும், ஹனுமனும் இங்கு தான் முதன்முதலாக சந்தித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.
கோவிலின் சுவற்றில் 'ஹனுமன் ஸ்லோகம்' எழுதப்பட்டு உள்ளது. இந்த ஸ்லோகத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் ஆறு மாதங்கள் உச்சரித்தால், 'மனதில் நினைப்பது நடக்கும்' என்று நம்பப்படுகிறது.
பெங்களூரில் இருந்து ஹம்பி 342 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. இங்கு செல்ல அரசு, ஆம்னி பஸ் வசதி உள்ளது.
- நமது நிருபர் -
விமானத்தில் செல்வோர் ஹூப்பள்ளி சென்று அங்கிருந்து, பஸ் மூலம் செல்லலாம்.
ரயிலில் செல்வோர் ஹொஸ்பேட் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை கார்கள் மூலம் ஹம்பியைசென்றடையலாம்.