35,000 அதிநவீன துப்பாக்கிகள் ராணுவ அமைச்சகத்தில் ஒப்படைப்பு
35,000 அதிநவீன துப்பாக்கிகள் ராணுவ அமைச்சகத்தில் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 07, 2024 02:15 AM

புதுடில்லி : நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 'கல்ஷின்காவ் ஏ.கே., - 203 எஸ்' ரகத்தைச் சேர்ந்த, 35,000 துப்பாக்கிகளை, ராணுவ அமைச்சகத்திடம் ஒப்படைத்துள்ளதாக, ரஷ்ய அரசின் பாதுகாப்பு நிறுவனமான 'ரோஸ்டெக்' தெரிவித்துள்ளது.
இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், இந்த துப்பாக்கிகளை தயாரித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு, உத்தர பிரதேசத்தின் அமேதியில், இதன் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட்டது.
ஆனால், பல தடைகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு தான் ஆலையில் தயாரிப்பு துவங்கியது.
தற்சார்பு இந்தியா எனும் முயற்சியின் கீழ் ராணுவத்துக்கு என, ஆறு லட்சம் ஏ.கே., 203 எஸ் துப்பாக்கிகளை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது முதல்கட்டமாக 35,000 துப்பாக்கிகள் ராணுவத்துக்கு தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கி, 300 மீட்டர் துாரம் வரை துல்லியமாக சுடும் வல்லமை உடையது. இதில், 7.62X39 எம்.எம்., கேட்ரிஜ் தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க, தற்போது ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் 'இன்சாஸ்' ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக, இந்த நவீன துப்பாக்கி வழங்கப்படுகிறது.