'போலீசாரை மிரட்டிய வழக்கில் ஹரிஷ் பூஞ்சாவுக்கு மீண்டும் ..சம்மன்!' : கைது செய்ய துடிப்பதாக காங்., அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு
'போலீசாரை மிரட்டிய வழக்கில் ஹரிஷ் பூஞ்சாவுக்கு மீண்டும் ..சம்மன்!' : கைது செய்ய துடிப்பதாக காங்., அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : மே 23, 2024 10:27 PM

மங்களூரு: போலீசாரை மிரட்டிய வழக்கில், விசாரணைக்கு ஆஜரான நிலையில், பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய துடிப்பதாக, காங்கிரஸ் அரசு மீது பா.ஜ., குற்றச்சாட்டு கூறி உள்ளது.
தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி மேலந்தபெட்டு கிராமத்தை சேர்ந்தவர் சசிராஜ் ஷெட்டி. ரவுடியான இவர் பா.ஜ., தொண்டராக உள்ளார். சட்டவிரோதமாக கல்குவாரி நடத்திய வழக்கில், கடந்த 18ம் தேதி சசிராஜ் ஷெட்டியை, பெல்தங்கடி போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி அறிந்த பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா போலீஸ் நிலையம் சென்றார். 'சசிராஜ் ஷெட்டி அப்பாவி, அவரை விடுவிக்க வேண்டும்' என்றார். இதற்கு எஸ்.ஐ., முரளிதர் நாயக் மறுத்தார். இதனால் அவரை ஹரிஷ் பூஞ்சா திட்டினார். 'போலீஸ் நிலையம் என்ன உனது அப்பன் வீட்டு சொத்தா' என்றும் ஆவேசமாக கத்தினார். போலீசாரையும் மிரட்டினார்.
ஆவேச பேச்சு
பணி செய்ய விடாமல் தடுத்ததாக எஸ்.ஐ., முரளிதர் நாயக் அளித்த புகாரில், ஹரிஷ் பூஞ்சா மீது வழக்கு பதிவானது.
இதை கண்டித்து பெல்தங்கடி தாலுகா அலுவலகம் முன்பு, ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். பெங்களூரு கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் நடந்தது போன்று, பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் நடக்க வேண்டுமா என்றும், ஆவேசமாக பேசினார்.
அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக, ஹரிஷ் பூஞ்சா மீது, மேலும் ஒரு வழக்கு பதிவானது. இந்நிலையில் போலீசாரை மிரட்டிய வழக்கில், ஹரிஷ் பூஞ்சாவை கைது செய்ய, பெல்தங்கடி அருகே கர்டாடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு, நேற்று முன்தினம் காலை பெல்தங்கடி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுப்பாபுர் மத், எஸ்.ஐ., சந்திரசேகர் மற்றும் போலீசார் சென்றனர்.
ஹரிஷ் பூஞ்சாவை கைது செய்ய ஆதரவாளர்கள், பா.ஜ., தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார், தொண்டர்கள் இடையில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி, ஹரிஷ் பூஞ்சாவுக்கு சம்மன் கொடுத்துவிட்டு, போலீசார் புறப்பட்டு சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு, பெல்தங்கடி போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ., நந்தகுமார் முன்பு, ஹரிஷ் பூஞ்சா விசாரணைக்கு ஆஜரானார். அப்பாவியான சசிராஜ் ஷெட்டியை கைது செய்ததால், கோபத்தில் சில வார்த்தைகளை பயன்படுத்தியதை, ஹரிஷ் பூஞ்சா ஒப்புக்கொண்டார். விசாரணை முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
ஆபாசம் இல்லை
பின்னர் அவர் அளித்த பேட்டி:
போலீசாரை மிரட்டியதாக என் மீது வழக்கு போட்டு உள்ளனர். சம்மன் கொடுத்ததால் விசாரணைக்கு வந்தேன். போலீஸ் நிலையம் ஒன்றும் அரசு சொத்து இல்லை. பொதுமக்கள் சொத்து. இங்கு வந்து நியாயம் கேட்க எனக்கும், மக்களுக்கும் உரிமை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எனது தொகுதியில் வனப்பகுதியில் கட்டப்பட்டு இருந்த வீடுகளை, வனத்துறையினர் சட்டவிரோதமாக இடிக்க முயற்சி செய்தனர்.
வன அதிகாரி ஒருவரை பார்த்து, 'லோபர்' என்று திட்டினேன். அது ஒன்றும் ஆபாச வார்த்தை இல்லை. மைசூரு கன்னட டிக்ஸ்ஷனரியில் லோபர் என்றால், வேலை செய்யாதவர் என்று பொருள் உள்ளது. அந்த அதிகாரி சரியாக வேலை செய்யாததால், லோபர் என்ற வார்த்தை அவரை காயப்படுத்தி இருக்கலாம். தட்சிண கன்னடா எஸ்.பி.,யை விமர்சித்து பேசினேன்.
பாத பூஜை
ஐ.பி.எஸ்., அதிகாரி என்பவர், மக்களுக்காக வேலை செய்பவராக இருக்க வேண்டும். தட்சிண கன்னடா எஸ்.பி., அப்படி செய்யவில்லை. காங்கிரஸ் அரசின் ஏஜன்டாக செயல்படுகிறார். அவர் நியாயமாக வேலை செய்தால், தகுந்த மரியாதை அளிப்பேன். எனக்காக போராட்டம் நடத்திய, தொண்டர்களை எனது வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.
அவர்களுக்கு வெறும் வார்த்தையால் நன்றி சொன்னால் போதாது. அவர்களுக்கு பாத பூஜை நடத்த வேண்டும். எனது உயிர் இருக்கும் வரை அவர்களுக்கு சேவை செய்வேன்.
காங்கிரஸ் அரசு என்னை கைது செய்ய, சதி செய்தது. தட்சிண கன்னடா போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். ஒருவேளை நான் கைது செய்யப்பட்டு இருந்தால், என்னை கைது செய்தவர்கள் 'சஸ்பெண்ட்' ஆகி இருப்பர். அரசு நியாயமாக நடக்க வேண்டும். அப்பாவியை கைது செய்ததால், மக்கள் பிரதிநிதியாக தட்டி கேட்டேன். எம்.எல்.ஏ., என்றால் வளர்ச்சி பணி செய்ய, மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க தான். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி, கட்சி தலைவர்களிடம் விவாதிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனு தாக்கல்
இந்நிலையில் நேற்று காலை விசாரணைக்கு ஆஜராகும்படி, ஹரிஷ் பூஞ்சாவுக்கு மீண்டும் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஐந்து நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார். இதற்கிடையில் நேற்று மதியம் அவர், பெங்களூரு புறப்பட்டு சென்றார்.
கட்சியின் மாநில தலைவர் விஜயேந்திராவிடம், தன் மீது பதிவான வழக்கு குறித்து விவாதிக்க சென்றதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்கு தடை விதிக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், மனு தாக்கல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஹரிஷ் பூஞ்சாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதற்கு, பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 'அவரை எப்படியாவது கைது செய்ய வேண்டும்' என்று, காங்கிரஸ் அரசு துடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.