ஹரியானா பெண் எம்.எல்.ஏ., ராஜினாமா ராஜ்யசபா தேர்தலில் களம் இறங்க வாய்ப்பு
ஹரியானா பெண் எம்.எல்.ஏ., ராஜினாமா ராஜ்யசபா தேர்தலில் களம் இறங்க வாய்ப்பு
ADDED : ஆக 20, 2024 09:19 PM

சண்டிகர்:ஹரியானா எம்.எல்.ஏ., கிரண் சவுத்ரி, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஹரியானா மாநிலம் பிவனியைச் சேர்ந்தவர் கிரண் சவுத்ரி, 69. காங்கிரஸ் கட்சியில் நீண்ட ஆண்டுகளாக இருந்த கிரண், 2005ம் ஆண்டில் இருந்து தோஷம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பதவி வகிக்கிறார். கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலால், கடந்த ஜூன் மாதம் காங்கிரசில் இருந்து விலகி தன் மகள் ஸ்ருதி சவுத்ரியுடன் பா.ஜ.,வில் இணைந்தார்.
கிரண் சவுத்ரி பா.ஜ.வில் இணைந்த நிலையில், சட்டசபையில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால், சபாநாயகர் அதை நிராகரித்தார்.
இந்நிலையில், தன் எம்.எல்.ஏ., பதவியை கிரண் சவுத்ரி நேற்று ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து, கிரண் கூறுகையில், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டேன். அதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு விட்டார்,”என்றார்.
நாடு முழுதும் 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு செப்டம்பர் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் சிங் ஹூடா, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் ரோஹ்தக் தொகுதியில் வெற்றி பெற்றார். இதையடுத்து, ஹரியானா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு ஒரு காலியிடம் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். எனவே, ஹரியானாவில் உள்ள ராஜ்யசபா தொகுதியில் கிரண் சவுத்ரி களம் இறக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஹரியானா சட்டசபையில் பா.ஜ., உள்ள பலத்தால் ராஜ்யசபாவுக்கு பா.ஜ., வேட்பாளரே வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 22ம் தேதி நடக்கும் என்றும், வேட்பு மனுக்களை 27ம் தேதி வரை வாபஸ் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் செப்டம்பர் 3ம் தேதி சட்டசபை செயலகத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்படும்.
கிரண் சவுத்ரி ராஜினாமா செய்த பின், 90 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில் பா.ஜ., - 41, காங்கிரஸ் - 28 மற்றும் ஜே.ஜே.பி., - 10, சுயேச்சை - 5, ஐ.என்.எல்.டி., - 1, ஹரியானா லோகித் கட்சி -1 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். நான்கு தொகுதிகள் காலியாக இருக்கின்றன.
ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, “சட்டசபையில் போதிய பலம் இல்லாததால் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை” என, கூறியுள்ளார்.