ஹரியானா முழுதும் காங்கிரஸ் அலை பா.ஜ.,வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ., கணிப்பு
ஹரியானா முழுதும் காங்கிரஸ் அலை பா.ஜ.,வில் இருந்து விலகிய முன்னாள் எம்.எல்.ஏ., கணிப்பு
ADDED : மே 14, 2024 08:09 PM
சண்டிகர்:ஹரியானாவில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரோஹிதா ரேவ்ரி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
ஹரியானா மாநிலம் பானிபட் தொகுதி முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., ரோஹிதா ரேவ்ரி, ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா முன்னிலையில் , காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
ரேவ்ரியை வரவேற்று ஹூடா பேசியதாவது:
ரேவ்ரி இணைவதால் பானிபட் தொகுதியில் காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்பெறும். எந்த நிபந்தனையும் இன்றி காங்கிரசில் ரேவ்ரி இணைந்துள்ளார். ஆனால், கட்சியில் அவருக்கு உரிய மரியாதையும், பதவியும் கிடைக்கும்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஹரியானா மாநிலம் முழுதும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். மாநிலத்தின் ஒன்பது தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். அதேபோல கூட்டணிக் கட்சியான ஆம் ஆத்மியும் குருக்ஷேத்ரா தொகுதியில் வெற்றிவாகை சூடும்.
ஒவ்வொரு சமூகத்தினரும் ஆளும் பா.ஜ.,அரசால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தனிநபர் வருமானம், முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ஹரியானா முன்னணியில் இருந்தது.
ஆனால் இப்போது, வேலையில்லாத் திண்டாட்டத்தில்தான் ஹரியானா முதலிடத்தில் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பா.ஜ., அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. இது ஒரு செயல்படாத அரசு. எனவே, பா.ஜ., அரசை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய ரோஹிதா ரேவ்ரி, “மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கடந்த 2014 - -2019 வரை பானிபட் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்த எனக்கு கட்சியில் உரிய மரியாதை இல்லை. எனவே, பா.ஜ.,வில் இருந்து விலகி விட்டேன்,”என்றார்.
ஹரியானா காங்கிரஸ் தலைவர் உதய் பன், “காங்கிரஸில் ரேவ்ரி இணைவது கட்சியை மேலும் பலப்படுத்தும். அவர் பானிபட் மாநகர மேயராகவும் பணியாற்றியுள்ளார். சமீபகாலமாக பல்வேறு பல கட்சிகளில் இருந்து காங்கிரசுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாடு முழுது காங்கிரஸ் அலை வீசுவதைக் காட்டுகிறது,”என்றார்.
ஹரியானாவில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி தேர்தல் நடக்கிறது.

