சொம்பை துாக்கி செல்லும் ராகுல் காங்கிரசின் சின்னம் மாறியதா?
சொம்பை துாக்கி செல்லும் ராகுல் காங்கிரசின் சின்னம் மாறியதா?
ADDED : ஏப் 27, 2024 11:13 PM

பல்லாரி: ''தங்கள் கட்சி சின்னத்தை காங்கிரசார் மாற்றி விட்டனரா? 'கை'க்கு பதிலாக சொம்பை உருவாக்கி உள்ளனர்.
ராகுலும் பிரசாரத்தின்போது 'கை'யை காட்டாமல், 'சொம்பை' காட்டுகிறார்,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சுரேஷ் குமார் கிண்டலடித்துள்ளார்.
பல்லாரியில் பா.ஜ., வேட்பாளர் ஸ்ரீராமுலுவை ஆதரித்து பிரசாரம் செய்ய முன்னாள் அமைச்சர் சுரேஷ் குமார் நகருக்கு வந்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
ராகுல் எங்கு சென்றாலும் 'சொம்பை' கையில் வைத்துக் கொள்கிறார். ஆனால் கர்நாடகாவில் வாக்குறுதித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி, எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யாமல் மக்களுக்கு காங்கிரஸ் 'சொம்பு' கொடுத்துள்ளது.
கடந்த பத்து மாதங்களில் வேலையில்லா இளைஞர்கள் வாக்குறுதித் திட்டத்துக்கான நிதி சென்றடையவில்லை.
அதுபோன்று பெண்களை இலவசமாக அழைத்துச் செல்லும் 'சக்தி' திட்டத்திலும், பஸ்கள் எண்ணிக்கை குறைத்து, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி 'சொம்பு' கொடுத்துள்ளனர்.
ஐந்து கிலோ அரிசி வழங்குவதாக கூறி, மத்திய அரசின் ஐந்து கிலோ அரிசியை கொடுத்து தாங்கள் கொடுப்பதாக காங்கிரசார், மக்களுக்கு 'சொம்பு' கொடுத்துள்ளனர். ஜூன் 4ம் தேதி காங்கிரசுக்கு மக்கள் 'சொம்பு' கொடுக்க உள்ளனர்.
நடந்து முடிந்த 14 லோக்சபா தொகுதியில் பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். பெங்களூரில் ஓட்டுப்பதிவு குறைய, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், மறைமுக காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

