ஹாசன் திருமண மண்டபத்துக்குள் நுழைந்து 8 பேரை கடித்த குரங்கு
ஹாசன் திருமண மண்டபத்துக்குள் நுழைந்து 8 பேரை கடித்த குரங்கு
ADDED : ஜூலை 02, 2024 09:40 PM

ஹாசன் : திருமண மண்டபத்துக்குள் புகுந்த குரங்கு ஒன்று, திருமணத்துக்கு வந்தவர்களை கடித்ததில், எட்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹாசன் மாவட்டம், சன்னராயபட்டணாவின் ஹிரிசாவே கிராமத்திற், உணவு தேடி வரும் குரங்கு, வீட்டில் உள்ள பொருட்கள் எடுத்து உண்பது, சாலையில் நடந்து செல்வோரை கடித்து காயப்படுத்துவது என பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வந்தது.
இதுதொடர்பாக புகார் அளித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்திணம் ஹிரிசாவே நுகேஹல்லா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், திருமணம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது மண்டபத்துக்குள் நுழைந்த குரங்கு ஒன்று, மணமகன் இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொண்டது. அத்துடன், மணமகனின் தொடையில் தனது தலையை வைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.
மணமக்கள் மண்டபத்தில் நடந்து சென்றபோது, அவர்கள் பின்னால் குரங்கும் நடந்து சென்றது.
சிறிது நேரத்தில், உணவு சாப்பிடும் பகுதிக்குச் சென்ற குரங்கு, நாற்காலியில் அமர்ந்தது. தங்கள் அருகில் குரங்கு வந்ததை பார்த்த சிலர், அங்கிருந்து சென்றனர். சிலர், தைரியமாக, வாழைப்பழம் கொடுத்தனர்.
பின், அதற்கென மேஜையில் இலை போட்டு, வாழை தார், இனிப்பு வகைகள் வைக்கப்பட்டன. சிறிது சாப்பிட்ட குரங்கு, அங்கிருந்து புறப்பட்டது.
திருமண மண்டபத்துக்கு வந்து கொண்டிருந்த சுசீலாம்மா, லீலாவதி, நிங்ககவுடா, கவுரம்மா, கிரிஜாம்மா, திம்மே கவுடா, கிரிகவுடா ஆகிய எட்டு பேரை கடித்தது.
இதை பார்த்த மற்றவர்கள், குரங்கை விரட்டி அடித்தனர்.
பின் காயமடைந்த எட்டு பேருக்கும், சமூக நல மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மீண்டும் இது தொடர்பாக வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.
திருமண வீட்டில்உறவினர்களை குரங்கு காயப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
� மணமக்கள் பின்னால் அமர்ந்திருந்த குரங்கு. � குரங்கிற்கென மேஜையில் போடப்பட்ட இலையில், வாழைப்பழம், இனிப்புகளை ருசி பார்த்தது. இடம்: ஹாசன்.