பனசங்கரி கோவிலில் ரூ.44 லட்சம் காணிக்கை மனதை பிசையும் பக்தர்களின் கடிதங்கள்
பனசங்கரி கோவிலில் ரூ.44 லட்சம் காணிக்கை மனதை பிசையும் பக்தர்களின் கடிதங்கள்
ADDED : மே 25, 2024 06:00 AM

பனசங்கரி : பனசங்கரி கோவில் உண்டியலில், ஒரே மாதத்தில் 44 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது.
பெங்களூரின் பனசங்கரி கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றது. தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வருகின்றனர்.
வெளி நாட்டு பக்தர்களும் வருகின்றனர். எனவே கோவிலின் வருவாயும் அதிகரிக்கிறது. மாதந்தோறும் உண்டியல் எண்ணப்படுகிறது.
ஏப்ரலில் உண்டியல் எண்ணப்பட்டபோது, 39 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியிருந்தது.
நேற்று உண்டியல் எண்ணும் பணிகள் நடந்தன. 44 லட்சத்து 4,840 ரூபாய், காணிக்கை வசூலாகியிருந்தது. 96 கிராம் தங்கம், 573 வெள்ளி பொருட்கள் இருந்தன.
தவிர ஐந்து யு.எஸ்.ஏ., டாலர், வியட்நாமின் 16 ரூபாய் நோட்டுகள், மலேஷியாவின் 14 நோட்டுகள், பூடானின் இரண்டு நோட்டுகள், நேபாளின் மூன்று நோட்டுகள், தாய்லாந்தின் மூன்று ரூபாய் நோட்டுகள் இருந்தன.
பக்தர்கள் பலரும், பனசங்கரி தேவியிடம் தங்கள் கோரிக்கைகளை விவரித்து, எழுதப்பட்ட கடிதங்களும் உண்டியல்களில் இருந்தன.
பெண்ணொருவர், 'என் தாயின் சொத்துகள் எனக்கு கிடைக்கும்படி செய்' என வேண்டியுள்ளார். மற்றொரு பெண், 'தன் மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம், நல்ல முறையில் நடக்க வேண்டும்' என கோரியுள்ளார்.
பக்தர்கள் எழுதியுள்ள கடிதங்களில், இளம் பெண்ணொருவர் எழுதிய கடிதம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் அவர், 'அம்மா நான் தவறு செய்துவிட்டேன்.
இதற்கு முன்பு கடிதம் எழுதியபோது, கோபிநாத்தை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள கூடாது என, எழுதியிருந்தேன். ஆனால் அவன் எனக்கு வேண்டாம்.
நல்ல பெயர், புகழ் கொண்டவர், பணக்காரரான, அறிவாளியான, ஹீரோவை போன்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுடன், எனக்கு திருமணம் நடத்தி வை.
நாங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் பல ஆண்டுகள் வாழ அருள் செய்' என வேண்டியுள்ளார்.

