ADDED : ஏப் 30, 2024 07:46 AM
ஹாவேரி: ஹாவேரியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகி உள்ளது. மக்களின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, மாவட்ட கலெக்டரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையருமான ரகுநந்தன் மூர்த்தி அறிவுறுத்தி உள்ளார்.
கர்நாடகாவில் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஹாவேரியில் பொதுவாக 34 - 35 டிகிரி செல்ஷியஸ் வெயில் இருக்கும். ஆனால் இம்முறை கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் தொடர்ந்து 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகி வருகிறது.
இதனால் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பகல் 12:00 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டரும், பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவர் ரகுநந்தன், அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது. எனவே, பொது மக்களின் உடல் நலனை பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெப்ப அலை குறித்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்த வேண்டும். பாதகமான விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பஸ் நிலையம், மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தலங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். பொது மக்களுக்கு நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில்குறிப்பிட்டு உள்ளார்.

