கடலோர மாவட்டங்களில் அனல் காற்று: குழந்தைகள், கர்ப்பிணியர் உஷார்
கடலோர மாவட்டங்களில் அனல் காற்று: குழந்தைகள், கர்ப்பிணியர் உஷார்
ADDED : பிப் 28, 2025 11:00 PM

தட்சிண கன்னடா: ''கடலோர பகுதியில் அடுத்த சில நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால், கர்ப்பிணியர், முதியவர்கள், புற்றுநோய் பாதித்தவர்கள், குழந்தைகள் காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்'' என, மாவட்ட சுகாதார அதிகாரி திம்மையா தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் கர்நாடக மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு மையம், கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாட்கள் அனல் காற்று வீசும் என எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக தட்சிண கன்னட மாவட்ட சுகாதார அதிகாரி திம்மையா கூறியதாவது:
காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணிக்குள் குழந்தைகள், கர்ப்பிணியர், முதியவர்கள், புற்றுநோய் பாதித்தவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும்
தாகம் எடுக்கவில்லை என்றாலும் தண்ணீர் குடியுங்கள்
முடிந்தவரை பருத்தி ஆடைகளை பயன்படுத்துங்கள்
வெளியே சென்றால், கூலிங் கிளாஸ், குடை, தொப்பி, ஷூ, காலணி பயன்படுத்துங்கள்
வெப்பம் அதிகமாக இருந்தால், வெளியே செல்வதை தவிர்க்கவும்
உடலில் நீர்ச்சத்து இழக்க செய்யும் மது, டீ, காபி, கார்பனேட் குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்
நிறுத்தப்பட்ட வாகனங்களில் உங்களின் செல்லப்பிராணிகளை விட்டு, விட்டு செல்ல வேண்டாம்
மயக்கம் அடைந்தாலோ அல்லது உடல் நிலை சரியில்லை என்றாலோ, உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்
இளநீர், எலுமிச்சை தண்ணீர், மோர் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் பயன்படுத்துங்கள். இது உடலை மீண்டும் நீரேற்றம் செய்ய உதவும்
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர், அவற்றை தினமும் தண்ணீர் குடிக்க வையுங்கள்
வீட்டை குளிர்ச்சியாக வைத்திருங்கள். வாசல், ஜன்னல்களில் திரைசிலைகள் பயன்படுத்துங்கள், வெளிகாற்று உள்ளே வரட்டும்
விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் பணி செய்யும்போது தொப்பி அல்லது குடை அணிந்து பணியாற்றுங்கள் அல்லது தலை, கழுத்து, முகத்தில் துணியால் சுற்றிக்கொள்ளுங்கள்
வெளியே செல்வோர், தண்ணீரை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
சிகிச்சை
வெயிலால் பாதித்தவரை, நிழலில் அமர வையுங்கள்
முதலில் ஒரு துணியால் அவரது முகத்தை துடையுங்கள். பின், தண்ணீரால் கழுவுங்கள். சாதாரண தண்ணீரை, அவரின் தலையில் ஊற்றவும். இதனால் அவரின் உடல் சூடு தணியும்
எலுமிச்சை ஜூஸ் அல்லது உடலில் நீர்சத்து அதிகரிக்கத் தேவையான உதவியை செய்யுங்கள்
அவரை உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ அல்லது மருத்துவமனைக்கோ அழைத்துச் சென்று, சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.