ADDED : ஆக 22, 2024 02:41 AM

மூணாறு:பலத்தமழையால் கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே நேற்று காலை இரண்டு முறை மரங்கள் சாய்ந்து போக்குவரத்து தடை பட்டது.
கேரளா இடுக்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணிப்படி சராசரியாக 71.1 மி.மீ., பதிவானது. அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 173.3 மி.மீ., மழை பெய்தது. தேவிகுளம் 62.6, உடும்பன்சோலை 7, இடுக்கி 7.4, தொடுபுழா 105.2 மி. மீ., மழை பதிவானது.
கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சீயப்பாறை நீர்வீழ்ச்சி அருகே நேற்று காலை 6:30 மணிக்கு ரோட்டில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. அடிமாலி தீயணைப்பு துறையினர், போலீசார், பொதுமக்கள் இணைந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
வாளரா நீர்வீழ்ச்சி அருகே காலை 11:00 மணிக்கு மரம் ரோட்டில் சாய்ந்தது. அதனை கடக்க முயன்ற தனியார் பஸ் சிக்கிக் கொண்டது. மரம் வெட்டி அகற்றிய பிறகு போக்குவரத்து சீரானது.
மூணாறில் நேற்று காலை 8:00 மணிப்படி 5.4 செ.மீ., மழை பதிவானது. பகலில் மழை குறைந்து வெயில் அடித்தது.