வட மாவட்டங்களில் தீவிரம் எடுத்த மழை பெலகாவியில் மின்னல் தாக்கி பெண் பலி
வட மாவட்டங்களில் தீவிரம் எடுத்த மழை பெலகாவியில் மின்னல் தாக்கி பெண் பலி
ADDED : மே 24, 2024 06:16 AM

பெலகாவி: கர்நாடகாவின் வட மாவட்டங்களில், மழை தீவிரம் எடுத்து உள்ளது. பெலகாவியில் மின்னல் தாக்கி, பெண் உயிரிழந்து உள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்தது.
ஆனால் கடந்த நான்கு நாட்களாக, காற்றழுத்த தாழ்வு காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் மழை தீவிரம் எடுத்து உள்ளது.
பாகல்கோட், யாத்கிர், பெலகாவி, தார்வாட் உள்ளிட்ட மாவட்டங்களில், சூறாவளி காற்றுடன் மழை பெய்கிறது. தார்வாட்டில் நேற்று மாலை ஒன்றரை மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
போக்குவரத்து பாதிப்பு
அக்கிபேட், ஹாவேரிபேட்டில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. வேளாண் பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வழியில் உள்ள சாலைகளில், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
தார்வாட் தாலுகாவின் ஹங்கரகி கிராமத்தில், மாட்டு தொழுவம் இடிந்து விழுந்தது. பல வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தது. பெலகாவி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு, ராய்பாக்கில் மின்னல் தாக்கி ஷோபா, 45 என்பவர் இறந்தார்.
மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். சிக்கோடியில் இருந்து மீரஜ் செல்லும் சாலையில் ராட்சத மரம் விழுந்தது. இதனால் அந்த சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யாத்கிர் நகரில் இரண்டாவது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. சிவநகரில் உள்ள பொதுப்பணி துறை அலுவலகத்தை, மழைநீர் சூழ்ந்தது.
கூடுதல் மழை
இதனால் அலுவலகத்திற்குள் செல்ல முடியாமல் அதிகாரிகளும், பொதுமக்களும் அவதி அடைந்தனர். விஜயபுராவின் முத்தேபிஹாலில் மின்னல் தாக்கி இரண்டு மாடுகள் இறந்தன.
கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பியிலும் பரவலான மழை பெய்தது. கடந்த ஆண்டு மார்ச் 1 ம் தேதி முதல் மே 21 தேதி வரை, கர்நாடகாவில் 107.8 செ.மீ மழை பெய்தது. ஆனால் இந்த ஆண்டு, இந்த காலகட்டத்தில் 130 செ.மீ, மழை பெய்து இருக்கிறது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.