ஹிமாச்சல், உத்தரகண்டில் கனமழை: 17 பேர் பலி் மூன்று பேர் பலி; 50 பேர் மாயம்
ஹிமாச்சல், உத்தரகண்டில் கனமழை: 17 பேர் பலி் மூன்று பேர் பலி; 50 பேர் மாயம்
ADDED : ஆக 01, 2024 11:30 PM

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், வெள்ளத்தில் சிக்கி மாயமான 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. உத்தரகண்டிலும், 12 பேர் பலியாகி உள்ளனர்.
ஹிமாச்சலில் பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இங்குள்ள மூன்று மாவட்டங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியதில் வீடுகள், சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சிம்லா மாவட்டத்தில் சமேஜ் குத் பகுதியில் நேற்று முன்தினம் மேகவெடிப்பால் பெய்த கனமழையால் அப்பகுதி வெள்ளக்காடாக மாறியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை வெள்ளத்தில் சிக்கி இருவர் பலியாகினர்; 30 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இருவர் மட்டுமே மீட்கப்பட்டனர்.
மாண்டி மாவட்டம் ராஜ்பன் கிராமத்தில் பெய்த கனமழையால் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. இரண்டு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஒருவர் பலியானார்; 10 பேர் மாயமாகினர்.
குலு மாவட்டத்தை புரட்டிப் போட்ட மழையால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக மாறியுள்ளன.
பாகிபுல் பகுதியில், 10 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 10க்கும் மேற்பட்டோரை காணவில்லை. மூன்று மாவட்டங்களிலும் ஐந்து பேர் பலியான நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
அவர்களை தேடும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாயமானவர்களை தேட, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பியாஸ் நதி நிரம்பி வழிவதால், சண்டிகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பார்வதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மலானா நீர்மின் திட்டங்களை சேதப்படுத்தி யுள்ளன. கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சலில் உள்ள பலாம்பூரில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் 21 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.