கேரளாவை புரட்டி எடுத்த கனமழை சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
கேரளாவை புரட்டி எடுத்த கனமழை சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
ADDED : மே 29, 2024 02:00 AM

திருவனந்தபுரம், கேரளாவில் எர்ணாகுளம், கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கேரளாவில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்தது. சிறிது இடைவேளைக்கு பின் நேற்று மீண்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
எர்ணாகுளம், கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இயல்பு வாழ்க்கை
கொச்சியில் நேற்று காலை முதல் பெய்த பலத்த மழையால் குறுகிய பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. கனமழை யால் வெள்ளம் சூழ்ந்து காக்கநாடு, இன்போ பார்க், அலுவா, எடப்பள்ளி பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பலுருத்தி என்ற பகுதியில் ஒரு மணி நேரத்தில், 10 செ.மீ., மழை கொட்டியது. களமசேரி என்ற இடத்தில் அரை மணி நேரத்தில், 6 செ.மீ., மழை பெய்தது.
இதே போல், திருவனந்தபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பல ஓடைகள் நிரம்பி வழிகின்றன. திருவனந்தபுரம் அருகே நெடுமாங்காடு, நெய்யாற்றின்கரை, கட்டக்காடா, ஆம்புரி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
நெய்யாற்றின்கரையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதில் வீடு இடிந்து சேதம் அடைந்தது. பாபநாசம் அருகே பிரபலமான பாலி மண்டபம் பகுதியில் மண் சரிந்து திடீர் பள்ளம் ஏற்பட்டது.
மேக வெடிப்பு
திருவனந்தபுரம் புறநகரில் உள்ள அருவிக்கரை அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஷட்டர்கள் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறும்படி அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.
முத்தலப்பொழி மீனவர் கிராமத்தை சேர்ந்த படகு கடலில் வீசிய பலத்த அலையால் நீரில் மூழ்கியதில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மூவர் மீட்கப்பட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இதேபோல் கோழிக்கோடு, எர்ணாகுளம் மாவட்டங்களிலும் நேற்று கனமழை பெய்தது.
இந்நிலையில், கொச்சியில் பெய்யும் தொடர்மழைக்கு மேக வெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று, கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையே, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம், 'ரெட் அலெர்ட்' விடுத்துள்ளது.