ADDED : ஜூன் 26, 2026 11:41 PM
துயரத்தில் தவிக்கும் வெனிசுலாவுக்கு மத்திய அரசு... ‘ஆப்பரேஷன் அமிஸ்தாத்’ நடவடிக்கை துவங்கியது
புதுடில்லி: இரட்டை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு உதவும் வகையில், ‘ஆப்பரேஷன் அமிஸ்தாத்’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. நம் விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் 35 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுடன் 41 பேர் அடங்கிய மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
––––––––––––––––––
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், கடந்த 24ம் தேதி இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. தலைநகர் கராகசுக்கு மேற்கே, மொரோன் கடற்கரை பகுதிக்கு அருகே 39 வினாடிகள் இடைவெளியில் இந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நில நடுக்கம் 7.2 ரிக்டர் அளவும், இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவும் பதிவானது-.
இதில், கராகஸ் மற்றும் லா குவைரா பகுதியகள் அதிகளவு சேதமடைந்துள்ளளன. நகரின் முக்கிய கட்டடங்கள், அடையாளங்கள் சரிந்து விழுந்து இடிபாடுகளின் குவியல்களாய் காட்சியளிக்கின்றன. பல பகுதிகளில் சாலைகளில் பெரிய அளவு பள்ளம் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
சம்பவ இடங்களில் இரவு பகலாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின்படி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மாயமாகியுள்ளதால், அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே உறுதியளித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, வெனிசுலா நாட்டு மக்களுக்கு உதவ, ‘ஆப்பரேஷன் அமிஸ்தாத்’ திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. ஸ்பானிஷ் மொழியில் ‘அமிஸ்தாத்’ என்றால் நட்பு என்று பொருள்.
எனவே, இந்த நிவாரண நடவடிக்கையானது, வெனிசுலாவுடன் இருதரப்பு உறவுகளை மதிப்பதிலும், ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், நம் நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
இது குறித்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
‘ஆப்பரேஷன் அமிஸ்தாத்’ தொடங்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்துக்கு பிந்தைய நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், அவசர உதவிகளுடன், நம் விமானப் படையின் இரண்டு ‘சி 17’ ரக விமானங்கள் வெனிசுலாவுக்கு புறப்பட்டன.
இந்த உதவியில், நம் ராணுவத்தின் கள மருத்துவமனை பிரிவு மற்றும் 35 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கும். நெருக்கடியான நேரத்தில், வெனிசுலா அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் ஆதரவளிக்க இந்தியா உறுதியுடன் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் காஜியபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இருந்து நேற்று புறப்பட்ட விமானத்தில், ராணுவத்தைச் சேர்ந்த ஒன்பது மருத்துவ அதிகாரிகள் உட்பட 41 பணியாளர்கள் அடங்கிய குழுவும் வெனிசுலா சென்றுள்ளன.
வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஆறு டன் மருத்துவப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களும் இந்த விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, கத்தார், பிரேசில், போர்ச்சுகல், கனடா உள்ளிட்ட நாடுகளும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன.
589 பேர் பலி! அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில நடுக்கங்களில் சிக்கி 589 பேர் பலியாகியுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும். உயிர் பிழைத்தவர்களை தேடும் பணியிலும், உணவு மற்றும் குடிநீர் வினியோகத்திலும் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதி முழுதும் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலா இடைக்கால அதிபர்
