ADDED : மே 28, 2024 06:18 AM

பெங்களூரு: 'ரேவ் பார்ட்டி' வழக்கு விசாரணைக்கு ஆஜராக, நடிகை ஹேமா, ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கும்படி, சி.சி.பி., அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகில் உள்ள தொழிலதிபரின் பண்ணை வீட்டில் சில நாட்களுக்கு முன், தெலுங்கானாவின் ஹைதராபாத்தை சேர்ந்த வாசு என்பவர், தன் பிறந்த நாளை முன்னிட்டு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். நிர்ணயித்த நேரத்தை தாண்டி, பார்ட்டி நடந்தது.
இது குறித்து தகவலறிந்த போலீசார், பண்ணை வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் தெலுங்கு நடிகை ஹேமா உட்பட, சின்னத்திரை நடிகர், நடிகையர், மாடல்கள், முக்கிய புள்ளிகள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் சிக்கினர். சோதனையில் பெருமளவில் போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பார்ட்டியில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள், தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. நடிகை ஹேமா உட்பட பலர் போதை பொருள் பயன்படுத்தியது உறுதியானது. ரேவ் பார்ட்டி வழக்கு குறித்து, சி.சி.பி., போலீசார் விசாரிக்கின்றனர். பார்ட்டிக்கு போதை பொருள் வினியோகித்தது யார், எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என, மற்ற விபரங்களை சேகரிக்கின்றனர்.
போதை பொருள் பயன்படுத்தியது குறித்து, மே 27ல் விசாரணைக்கு ஆஜராகும்படி, எட்டு பேருக்கு சி.சி.பி., அதிகாரிகள் நோட்டீஸ் அளித்திருந்தனர். நடிகை ஹேமா உடல்நிலையை காரணம் காண்பித்து, விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகளிடம் ஒரு வாரம், கால அவகாசம் கேட்டுள்ளார். சிலர் மட்டும் விசாரணைக்கு ஆஜரானதாக தகவல்கள் கூறுகின்றன.