ADDED : ஆக 01, 2024 12:00 AM

தண்ணீர் தளும்பி பாயும் ஹேமகிரி தடுப்பணை சுற்றுலா பயணியரை, வா வா என கை வீசி அழைக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் குவிகின்றனர். போட்டோ, வீடியோ, செல்பி எடுக்கின்றனர்.
பொதுவாக கோடைக் காலம், மழைக்காலம், குளிர் காலம் என அந்தந்த பருவ காலங்களில் பார்க்க, குறிப்பிட்ட சுற்றுலா தலங்கள் ஏற்றதாக இருக்கும். மழைக்காலத்தில் அணைகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகளை காண்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
கர்நாடகாவில் பெரும்பாலான மாவட்டங்களில், இத்தகைய நீர் வீழ்ச்சிகள் ஏராளம். இவற்றின் அழகும் தாராளம். இதில் ஹேமகிரி தடுப்பணையும் ஒன்றாகும்.
மாண்டியா, கே.ஆர்.பேட்டில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் ஹேமகிரி தடுப்பணை உள்ளது. ஆண்டு தோறும் மழைக்காலத்தில், ஹேமாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கோரூரில் உள்ள ஹேமாவதி அணை நிரம்பும்.
அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர், ஹேமகிரி தடுப்பணையை அடையும். அணை நிரம்பி தளும்பும் அழகை பார்க்க, இரண்டு கண்கள் போதாது.
இந்த காட்சியை கண்டு ரசிக்க, சுற்றுலா பயணியர் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். ஹேமகிரி பகுதியில் இயற்கை எழில் வஞ்சனையின்றி கொட்டிக் கிடக்கிறது. வாரம் முழுதும் மக்கள் நெரிசல், வாகனங்களின் சத்தம், பணி நெருக்கடி என, பரபரப்பான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு, ஒருநாளாவது மன அமைதி, நிம்மதியுடன் பொழுது போக்க விரும்புவோர், ஹேமகிரிக்கு வருகின்றனர்.
நண்பர்களுடன், குடும்பத்துடன் வந்து சில மணி நேரம் அணைப்பகுதியில் இருந்து விட்டு, புத்துணர்ச்சி பெற்று திரும்புகின்றனர்.
அணையில் நின்று சுற்றிலும் பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை, பச்சை பசேல் என, கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சிகள், காதுகளுக்கு இனிமையாக ஜலஜலவென பாயும் தண்ணீர், உடலை வருடி செல்லும் தென்றல் காற்று, இந்த அற்புதமான உணர்வை அனுபவிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், இயற்கையுடன் இரண்டற கலந்து விடுகின்றனர்.
ஹேமகிரி தடுப்பணை அருகில், சந்தகோனஹள்ளியில் அம்பாள் கோவில் உள்ளது. பவுர்ணமி, அமாவாசையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும். ஹேமகிரி பிருகு ரிஷி தவம் செய்த புனிதமான தலமாகும்.
ஹேமாவதி, காவிரி, லட்சுமண தீர்த்த ஆறுகள் சங்கமிக்கும் இடமாகும். ஆறுகள் சங்கமிப்பதை காண, சுற்றுலா பயணியர் பெருமளவில் வருகின்றனர்.
கே.ஆர்.பேட்டில் இருந்து, ஹேமகிரிக்கு பஸ் வசதி, தனியார் வாகன வசதி உள்ளது. சொந்த வாகனங்களிலும் செல்லலாம். அணையில் நீர்மட்டம் அபாய கட்டத்தை மீறி பாய்கிறது. எனவே இங்கு வரும் சுற்றுலா பயணியர், அணையை தொலைவில் இருந்து ரசித்து விட்டு செல்வது நல்லது.