ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்
ஜாமினில் விடுதலையான ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்
UPDATED : ஜூலை 04, 2024 05:21 PM
ADDED : ஜூலை 03, 2024 11:58 PM

ராஞ்சி: நில மோசடி வழக்கில் சிறை சென்று, ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வர் ஆக இன்று( ஜூலை 04) பதவியேற்று கொண்டார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முதல்வராக பதவி வகித்த இவர், ராஞ்சியில் 8.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் தயாரித்ததாக புகார் எழுந்தது.
அதில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்ததாக கூறி, அமலாக்கத் துறை அவரை ஜனவரி மாதம் கைது செய்தது. அவர் இண்டியா கூட்டணியில் முக்கிய புள்ளி. லோக்சபா தேர்தல் அறிவிப்பு வர இருந்த நிலையில் இவ்வாறு கைது செய்ய மத்திய அரசின் துாண்டுதலே காரணம் என அவரும், அவரது கட்சியும் குற்றம் சாட்டின. என்றாலும், பதவியை பிடித்துக் கொண்டிராமல் ராஜினாமா செய்தார். தன் நம்பிக்கைக்குரிய பெரியவர் சம்பய் சோரனை முதல்வராக்க ஏற்பாடு செய்துவிட்டு, சிறைக்கு சென்றார். ஐந்து மாதம் சிறையில் இருந்த அவருக்கு இப்போது தான் ஜாமின் கிடைத்தது. ஜூன் 28ல் வெளியே வந்தார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவற்றின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், முதல்வர் சம்பய் வீட்டில் நேற்று நடந்தது. அதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சட்டசபை கட்சியின் தலைவராக மீண்டும் ஹேமந்த் சோரன் தேர்வு செய்யப்பட்டார். அவரே மறுபடியும் முதல்வராக வேண்டும் என பல உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர். ஹேமந்த் அதை ஏற்றுக் கொண்டார். சம்பய் ராஜினாமா செய்தால் தான் ஹேமந்த் பதவி ஏற்க முடியும். எனவே, ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு சம்பயிடம் சொல்லப்பட்டது. அவர் மிகுந்த வருத்தத்துடன் கடிதத்தில் கையெழுத்திட்டார். அவமானமாக இருப்பதாக புலம்பினார்.
சம்பயை சமாதானப்படுத்தி, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க அழைத்து சென்றார் ஹேமந்த். சம்பய் சோரனின் ராஜினாமா கடிதத்தையும், ஹேமந்த் சோரனின் தலைவர் தேர்வு கடிதத்தையும் கவர்னர் பெற்றுக் கொண்டார். சம்பய் சோரனுக்கு ஆறுதல் பரிசாக கட்சியின் செயல் தலைவர் பதவி அளிக்க ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
'நீண்ட அனுபவம் கொண்ட சம்பய் சோரனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. குடும்பம் சார்ந்த கட்சியில் மற்றவர்களுக்கு இடமில்லை, எதிர்காலமும் இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது.
'ஊழலின் உருவமான ஹேமந்த் சோரனுக்கு எதிராக சம்பய் சோரன் கொடி துாக்க வேண்டும்' என்று பா.ஜ., நிர்வாகிகள் கூறினர்.
ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. ஹேமந்த் சோரன் தலைமையில் அதை எதிர்கொள்ள இண்டியா அணி விரும்புகிறது. இதுவே அவர் மீண்டும் முதல்வராக காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், முதல்வராக ஹேமந்த் சோரன் வரும் 7 ம் தேதி பதவி ஏற்பார் என முதலில் கூறப்பட்டது. பிறகு, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பை ஏற்று இன்று மாலை 4:50 மணியளவில் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.