எடியூரப்பாவை கைது செய்ய ஹைகோர்ட் தடை 'போக்சோ' வழக்கில் தற்காலிக நிம்மதி
எடியூரப்பாவை கைது செய்ய ஹைகோர்ட் தடை 'போக்சோ' வழக்கில் தற்காலிக நிம்மதி
ADDED : ஜூன் 15, 2024 04:31 AM

பெங்களூரு: போக்சோ' வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை கைது செய்ய, பெங்களூரு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது. இதையடுத்து, அவர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்தவர் பா.ஜ.,வின் எடியூரப்பா, 81.
இவரிடம், கடந்த பிப்ரவரி 2ம் தேதி, மமதா, 55, என்ற பெண், தன் 17வயது மகளுடன், உதவி கேட்டு சென்றுள்ளார். அவருக்கு உதவும் வகையில், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தாவை தொடர்பு கொண்டு எடியூரப்பா பேசி உள்ளார்.
சி.ஐ.டி., விசாரணை
இதற்கிடையில், எடியூரப்பா, தன் மகளை அறைக்குள் அழைத்து சென்று, பாலியல் ரீதியாக சீண்டியதாக, அப்பெண் சதாசிவ நகர் போலீசில், மார்ச் 14ம் தேதி புகார் அளித்தார். போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ், எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், புகார் அளித்த மமதா, புற்றுநோயால் மே 27ம் தேதி உயிரிழந்தார்.
இதே வேளையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார். ஆனால், புகார் அளித்து பல மாதங்கள் ஆகியும், எடியூரப்பா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, மமதாவின் சகோதரர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையில், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியும், எடியூரப்பா ஆஜராகாததால், கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கும்படி, சி.ஐ.டி., தரப்பில், பெங்களூரு 51வது சிட்டி சிவில் மற்றும் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் கீழமை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பாவுக்கு கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து, டில்லியில் உள்ள அவரை கைது செய்ய, சி.ஐ.டி., அதிகாரிகள் விரைந்தனர்.
இதனால், முன் ஜாமின் கேட்டும், கைது செய்ய தடை கோரியும், உயர் நீதிமன்றத்தில், எடியூரப்பா தரப்பில் நேற்று இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த இரண்டு மனுக்களுடன், ஏற்கனவே வழக்கை ரத்து செய்ய கோரிய மனு உட்பட மூன்று மனுக்களையும் சேர்த்து, உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித், நேற்று விசாரித்தார்.
நீதிபதி கேள்வி
அப்போது, 'வழக்கு பதிவு செய்யப்பட்டது எப்போது' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு, 'மார்ச் 14ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜூன் 12ம் தேதி சம்மன் வழங்கப்பட்டது. அதுவரை போலீசார் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று தெரியவில்லை' என எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் தெரிவித்தார்.
'அப்படி என்றால், இப்போது ஏன் கைது செய்ய வேண்டி உள்ளது' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு அரசு தரப்பில், சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி.,யான பி.கே.சிங், ''ஜூன் 12ம் தேதி ஆஜராகும்படி அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது. மொபைல் போனில் இருந்த வீடியோ, குரல் சாட்சியங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. மே 13ம் தேதி தடயவியல் அறிக்கை வந்தது. பின், சம்மன் வழங்கப்பட்டது. அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றத்தில் பிடிவாரன்ட் பெறப்பட்டது,'' என்றார்.
மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதி, 'எடியூரப்பா வீட்டில் சம்பவம் நடந்துள்ளதாக கூறுகிறீர். அவர் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்யவில்லை. எப்படி விசாரணை நடத்துவீர்கள்' என்றார்.
இடையிடையே அரசு தரப்பில் வழக்கறிஞர் அசோக் நாயக், ''எடியூரப்பா சாட்சியங்களை அழித்து விடுவார் என்பதால், அவரை கைது செய்ய வேண்டி உள்ளது,'' என்றார்.
இதற்கு, ''அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரை கைது செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி அளிக்க கூடாது. ஜூன் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார்,'' என்று எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
இரண்டு வாரங்கள்
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணா தீக் ஷித், ''மேலோட்டத்துக்கு வேண்டுமென்றே விசாரணை நடத்துவது தெரிகிறது. அவருக்கு வயதாகிறது. அவர் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக தெரிவித்துள்ளார்.
''அடுத்த இரண்டு வாரங்கள் வரை அவரை கைது செய்யக் கூடாது. கீழமை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் இல்லை,'' என உத்தரவிட்டார்.
இதன்பின், இரண்டு வாரங்களுக்கு பின், மீண்டும் விசாரிக்கலாம் என்று நீதிபதி கூறினார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, எடியூரப்பாவுக்கு பெரும் நிம்மதியை தந்து உள்ளது.
காங்கிரஸ் தலைவர் எதிர்ப்பு
இது குறித்து, காங்., மூத்த தலைவரான சாமனுார் சிவசங்கரப்பா, 92 கூறியதாவது:
குற்றச்சாட்டு உறுதியானால், ஒருவரை கைது செய்வதை ஏற்கலாம். சாலையில் செல்லும் யாரோ ஒருவர் புகார் அளித்தார் என்பதற்காக, கைது செய்வது என்றால் என்ன அர்த்தம். அந்த பெண், எடியூரப்பா மீது மட்டுமின்றி, 50க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளித்துள்ளார். இத்தகைய பெண் அளிக்கும் புகாரில், ஏதாவது மதிப்புள்ளதா.
நடிகர் தர்ஷன் செய்தது தவறு. யாரும் சட்டத்தை கையில் எடுத்துச் கொள்ள கூடாது. யாராவது தொல்லை கொடுத்தால், புத்திமதி கூறி அனுப்பி இருக்கலாம். அதை விட்டுவிட்டு அடித்து கொலை செய்திருக்கக் கூடாது. தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி, அகில இந்திய வீரசைவ மஹாசபா சார்பில், அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

