முதல்வரை சந்திக்க எம்.பி.,க்கு அனுமதி மறுப்பு சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
முதல்வரை சந்திக்க எம்.பி.,க்கு அனுமதி மறுப்பு சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : செப் 04, 2024 09:36 PM
இந்தியா கேட்:முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கக் கோரிய ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் மனுவுக்கு மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலால் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., சந்தீப் குமார் பதக் அனுமதி கோரினார். அதற்கு சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதை எதிர்த்தும் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்திக்க அனுமதி வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்றத்தை சந்தீப் குமார் பதக் அணுகினார்.
இந்த வழக்கில் சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க சந்தீப் குமாருக்கு ஏப்ரலில் இரண்டு முறை அனுமதி அளிக்கப்பட்டது. முதல்வரைச் சந்தித்த பிறகு அவர் தெரிவித்த சில அறிக்கைகள், சிறை விதிகளுக்கு முரணானது. பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதனால் அவருக்கு மீண்டும் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒத்திவைத்துள்ளது.
இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மியின் மற்றொரு எம்.பி.,யான சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவில், 'திஹார் சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதி அளிக்கும்படி சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சஞ்சய் சிங் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா முன்வைத்த வாதம்:
என் கட்சிக்காரர் ராஜ்யசபா உறுப்பினர். அவர் முன்னாள் கைதி என்பதால் முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடுமையான உடல்நலக் குறைவு இருக்கிறது. அவரது உடல்நிலையை பரிசோதிப்பதற்காக அவரை அவரது குடும்பத்தினர் சந்திக்க விரும்புகின்றனர்.
சிறை கண்காணிப்பாளர் இதுபோன்ற விஷயங்களைக் கையாளும் விதம், அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய ஒருவாரம் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மூன்று நாட்களுக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யும்படி, திஹார் சிறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இந்த மனு வரும் 9ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.