உதட்டை அழுத்துவது வன்கொடுமை அல்ல: சிறுமி பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
உதட்டை அழுத்துவது வன்கொடுமை அல்ல: சிறுமி பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
UPDATED : மார் 08, 2025 06:26 AM
ADDED : மார் 08, 2025 06:14 AM

புதுடில்லி: 'சிறுமியின் உதட்டை அழுத்துவதில் வெளிப்படையான பாலியல் நோக்கம் இல்லாவிட்டால், 'போக்சோ' சட்டத்தின் கீழ், அதை பாலியல் வன்கொடுமை குற்றமாக கருத முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
டில்லியை சேர்ந்த, 12 வயது சிறுமியின் தந்தை வழி உறவினர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் சிறுமியின் உதட்டை அழுத்தியதுடன், அருகே படுத்து உறங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, ஐ.பி.சி., 354வது பிரிவின் கீழ், பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் நோக்கத்துடன் அவரை பலவந்தப்படுத்தியது மற்றும், 'போக்சோ' சட்டத்தின் 10வது பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஸ்வரண காந்தா சர்மா, ஐ.பி.சி., 354வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ததை உறுதி செய்தார்.
அதே நேரம், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான குற்றச்சாட்டில் இருந்து மனுதாரரை விடுவித்தார்.
அப்போது நீதிபதி கூறியதாவது:
ஒரு பெண் குழந்தையின் உதடுகளைத் தொட்டு அழுத்தும் செயல், ஐ.பி.சி., பிரிவு 354ன் கீழ் குற்ற வரம்பிற்குள் வருகிறது. குறைந்தபட்ச தொடுதல் இருந்தாலே இப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.
அதே நேரம், போக்சோ சட்டப்பிரிவு 10ன் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய, பாலியல் நோக்கத்துடன் சிறுமியை அணுகியிருக்க வேண்டியது அவசியம்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் பாலியல் நோக்கத்துடன் சிறுமியை அணுகியதாக அவர் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை. பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை அழுத்துவது, அருகில் படுத்து உறங்குவது வன்கொடுமை ஆகாது.
எனவே, பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய முடியாது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் போது விசாரணை நீதிமன்றம் அதிக கவனம் கொள்ள வேண்டும். ஏனோதானோவென்று நான்கு வரிகளில் உத்தரவு பிறப்பிக்க கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.