ADDED : மார் 01, 2025 01:24 AM
சிம்லா: கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஹிமாச்சல பிரதேச அரசு, சில அரசு நலத்திட்ட பணிகளுக்கு கோவில் நிதியை கோரியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் வெள்ளம், நிலச்சரிவு என அடுத்தடுத்து இயற்கை சீற்றங்களால், இம்மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும், 842 கோடி ரூபாய் அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டதாக, மாநில அரசு கணக்கிட்டுள்ளது.
கடந்த 2023ல் ஏற்பட்ட இழப்புகள், 10,000 கோடி ரூபாய் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இந்நிலையில், மாநில அரசின் ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்வுக்கான நலத்திட்டம் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்ட பணிகளுக்கு நிதி உதவி அளிக்கும்படி, கோவில்களுக்கு ஹிமாச்சல பிரதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மாநில அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள், இத்திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு, பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் கூறுகையில், ''ஒருபுறம் சனாதன தர்மத்தை இழிவாக பேசும் காங்கிரஸ் கட்சி, மறுபுறம் கோவில் நிதியை அரசு திட்டங்களுக்காக கேட்பது ஏற்புடையதல்ல,'' என, தெரிவித்துள்ளார்.