ADDED : பிப் 25, 2025 05:14 AM

மைசூரு: கர்நாடக உயர் நீதிமன்றம், நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்ததால், ஹிந்து அமைப்பினர், மைதானத்துக்குள் கூட்டம் மட்டும் நடத்தினர்.
மைசூரில், சமூக வலைதளத்தில் ஆட்சேபனை கருத்து பதிவிட்டவரை, விடுவித்ததாக எழுந்த தகவலை அடுத்து, நுாற்றுக்கணக்கானோர் உதயகிரி போலீஸ் நிலையம் முன் குவிந்தனர். போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்த போது, அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதை கண்டித்து, 'ராஷ்டிரிய சுரக் ஷா, ஜனந்தோலனா சமிதி'யினர் சார்பில் நேற்று ஊர்வலம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளையில், மாவட்ட காங்கிரஸ், தலித் சங்கம் சார்பில் 'அமைதி ஊர்வலம்' நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இவ்விரு நிகழ்ச்சிகளுக்கும், மைசூரு நகர போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் அனுமதி மறுத்தார்.
இதை எதிர்த்து, 'ராஷ்டிரிய சுரக் ஷா, ஜனந்தோலனா சமிதி'யினர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மாலை 3:30 மணிக்கு மைதானத்துக்குள், ஒன்றரை மணி நேரம் ஊர்வலம் நடத்தலாம். அமைதியை குலைக்கும் வகையில் அறிக்கை வெளியிடக்கூடாது. அசம்பாவிதம் நடந்தால், விண்ணப்பதாரரே பொறுப்பேற்க வேண்டும். ஒரு லட்சம் ரூபாய்க்கான பத்திரம் வழங்க வேண்டும்' என்றது.
இதையடுத்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, மைசூரு எம்.பி., யதுவீர் உடையார், முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா உட்பட கட்சியினர் ஆலோசனை நடத்தினர். ஊர்வலம் புறப்படுவதாக இருந்த மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் தலைவர்கள் பேசினர். ஊர்வலம் நடக்கவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும், வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.