ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைவு; மத்திய அமைச்சர் ஜோஷி கவலை
ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைவு; மத்திய அமைச்சர் ஜோஷி கவலை
ADDED : மே 10, 2024 10:48 PM

ஹூப்பள்ளி : ''நாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவதாக, அறிக்கை வெளியாகியுள்ளது கவலை அளிக்கிறது. இதை சமுதாயமும், அரசுகளும் தீவிரமாக கருத வேண்டும்,'' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் கூறியதாவது: நாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைவதாக, அறிக்கை வெளியாகியுள்ளது. இது கவலைக்குரிய விஷயமாகும். ஹிந்து சமுதாயமும், அரசுகளும் தீவிரமாக கருதி, மாற்று நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால், நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்காது.
உலகில் மதசார்பற்ற ஒரே நாடு என்றால், அது இந்தியா தான். பல விதமான கலாசாரம் கொண்ட நாடு. மதச்சார்பற்ற உணர்வு மக்களின் ரத்தத்தில் ஊறியுள்ளது. நாம் பல்வேறு கடவுள்களை பூஜிக்கிறோம்.
ஹிந்துக்களின் வாழ்க்கை நடைமுறை, நல்ல முறையில் நீடிக்க வேண்டுமானால், அறிக்கையை தீவிரமாக கருதுவது அவசியம்.
நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் ராகுலின் ஆலோசகர் சாம் பிட்ராடோ உட்பட காங்கிரசார் முயற்சிக்கின்றனர். தோல் நிறத்தில் நாடு ஒன்றாக இல்லை என, கூற முயற்சிக்கின்றனர்.
இதற்கு முன் சுரேஷும், நாட்டை பிரித்து தென்னிந்தியா என அறிவிக்கும்படி வலியுறுத்தினார். நாட்டை பிரிக்க பல தலைமுறைகளாக முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.