ஒரு 'பெக்' சரக்கு அடியுங்கள்! லட்சுமியை கிண்டல் அடித்த பா.ஜ.,
ஒரு 'பெக்' சரக்கு அடியுங்கள்! லட்சுமியை கிண்டல் அடித்த பா.ஜ.,
ADDED : ஏப் 14, 2024 07:13 AM

பெலகாவி: “இரவில் துாக்கம் வரவில்லை என்றால், ஒரு 'பெக்' சரக்கு அடியுங்கள்,” என, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் பாட்டீல் கிண்டல் அடித்துள்ளார்.
பெலகாவி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஹிண்டல்காவில் நேற்று நடந்த, பா.ஜ., கூட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டரை ஆதரித்து, பெலகாவி ரூரல் முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் பாட்டீல் பேசியதாவது:
பெண்கள் கோபம்
பெலகாவி ரூரல் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் உள்ளார். அவர் தொகுதியில் நடக்கும் பா.ஜ., கூட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இதிலிருந்து அவர் மீது, பெண்கள் கோபத்தில் உள்ளது நன்றாக தெரிகிறது.
தன் மகன் மிருணாளுக்கு ஓட்டுப் போடாவிட்டால், பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் கிடைக்காது; இலவச மின்சாரம், பஸ் பயணம் 'கட்' செய்யப்படும் என, பெண் வாக்காளர்களை, லட்சுமி ஹெப்பால்கர் மிரட்டுகிறார்.
இங்கு வந்திருக்கும் பெண்கள் கூட்டத்தை பார்த்தால், அவருக்கு இரவில் துாக்கம் வராது. துாக்க மாத்திரை பயன்படுத்திக் கொள்ளட்டும். அப்படியும் துாக்கம் வரவில்லை என்றால், ஒரு 'பெக்' சரக்கு அடிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரும் ஒரு பெண் தானே?
சஞ்சய் பாட்டீல் பேச்சுக்கு, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கொடுத்த பதிலடி:
என்னை பற்றி தரக்குறைவான வார்த்தைகளை, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சய் பாட்டீல் பயன்படுத்தி உள்ளார். மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை அமைச்சராக உள்ளேன்.
பெண் அமைச்சராக இருக்கும் நானே, இத்தகையை அவமானத்தை சந்திக்க வேண்டி உள்ளது. இதிலிருந்து, பா.ஜ.,விடம் இருந்து பெண்களுக்கு மரியாதை எதிர்பார்க்க முடியுமா?
ஹிந்து கலாசாரம் பெண்களை மதிக்கிறது. ஆனால் பா.ஜ., அவமதிக்கிறது. சஞ்சய் பாட்டீல் என்னை பற்றி கீழ்தரமாக பேசும்போது, அந்த மேடையில் இருந்த எம்.பி., மங்களா அங்கடி சிரிக்கிறார். அவரும் ஒரு பெண் தானே. ஒரு பெண்ணை அவமதிக்கும்போது ஏற்படும், வலி பற்றி அவருக்கு தெரியாதா? சஞ்சய் பாட்டீலை கண்டித்து, பெண்கள் போராட்டம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கூறி உள்ளார்.

