விரைவில் 'ஆண்ட்ராய்டு' ஏ.டி.எம்., இந்தியாவில் 'ஹிட்டாச்சி' அறிமுகம்
விரைவில் 'ஆண்ட்ராய்டு' ஏ.டி.எம்., இந்தியாவில் 'ஹிட்டாச்சி' அறிமுகம்
ADDED : செப் 01, 2024 03:16 AM
மும்பை: 'ஆண்ட்ராய்டு' இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படும் ஏ.டி.எம்., இயந்திரத்தை ஜப்பானை சேர்ந்த 'ஹிட்டாச்சி' நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக பணம் பெறுவது மட்டுமின்றி, ஏராளமான வங்கிச் சேவைகளை எளிதில் பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடந்த நிதித்தொழில்நுட்ப மாநாட்டில், இதுகுறித்து இந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டதாவது:
'நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' உடன் இணைந்து, பண மறுசுழற்சி இயந்திரத்தை ஹிட்டாட்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. டிஜிட்டல் வங்கிச் சேவைக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும்.
வங்கிக் கணக்கில் கியு.ஆர். குறியீடு அடிப்படையில் யு.பி.ஐ., முறையில், பணம் செலுத்துவது, பணத்தை திரும்ப எடுப்பது, கணக்கு துவங்குவது, கிரெடிட் கார்டு விண்ணப்பித்து பெறுவது, தனிநபர் கடன், காப்பீடு, எம்.எஸ்.எம்.இ., கடன், பாஸ்ட்டேக் விண்ணப்பம், பல்வேறு சேவைகளுக்கான ரீசார்ஜ் என, பல சேவைகளை இதன் வாயிலாக பெறமுடியும்.
வங்கிக் கிளை இல்லாத பகுதிகளில், குறிப்பாக, கிராமப்புறங்களில் இந்த இயந்திரம் வாயிலாக, எளிதாக வங்கிச் சேவைகளை வழங்க முடியும். பல்வேறு அட்டைகளை எடுத்துச் செல்ல அவசியமின்றி, தொடுதிரையை பயன்படுத்தி, கியு.ஆர்.,குறியீடு மற்றும் யு.பி.ஐ., வாயிலாக வங்கிச் சேவைகள் கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளருக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.
மேலும், வங்கிகளின் குறிப்பிட்ட பணிநேரம் போல இல்லாமல்,, 365 நாட்களும் 24 மணி நேரமும் வங்கிச் சேவைகளை பெற, ஏ.டி.எம்., போன்ற இந்த இயந்திரம் உதவும். சுயசேவை வசதிக்கென உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை நிறுவுவதன் வாயிலாக, நாட்டின் வங்கிச்சேவை பெருமளவு விரிவாக்கம் பெறும்.
இவ்வாறு ஹிட்டாச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
டெபிட், கிரெடிட், ஏ.டி.எம்., அட்டைகள் தேவையில்லை
க்யூ.ஆர்., குறியீடு, யு.பி.ஐ., தொழில்நுட்பத்தில் செயல்படும்
வங்கிக்கணக்கில் பணம் செலுத்தலாம், எடுக்கலாம்
வங்கிக் கணக்கு தொடங்கலாம், கார்டுகளை பெறலாம்
தனிநபர் கடன், சிறுதொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
பாஸ்ட்டேக் விண்ணப்பிக்கலாம், ரீசார்ஜ் செய்யலாம்