ADDED : ஜூலை 25, 2024 11:07 PM

பெங்களூரு: கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனுக்கு வீட்டு உணவு வழங்க அனுமதி மறுத்து, பெங்களூரு 24வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களில் தர்ஷனின் உடல் எடை குறைந்தது.
இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தர்ஷன் தாக்கல் செய்த மனுவில், 'சிறையில் வழங்கப்படும் உணவால் எனக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. உணவே விஷமாக மாறுகிறது. இதனால் வீட்டு உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும்' என்று கேட்டு இருந்தார்.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்து வந்தார். கடந்த 18ம் தேதி நடந்த விசாரணையின் போது, தர்ஷனுக்கு வீட்டு உணவு சாப்பிட அனுமதி வழங்கும்படி வக்கீல் ராகவேந்திரா கேட்டுக் கொண்டார்.
ஆனால் முழுமையான விசாரணையை, 29ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். 'மிகவும் அவசரம் என்றால் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்து கொள்ளுங்கள்' என்றும் கூறினார்.
இதனால் பெங்களூரு 24வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தர்ஷன் வக்கீல் ராகவேந்திரா மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி விஸ்வநாத் நேற்று விசாரித்தார்.
தர்ஷன் வக்கீல் ராகவேந்திரா: கர்நாடக சிறை திருத்த கையேடு பிரிவு 728ன் படி, சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளுக்கு வீட்டு சாப்பாடு வழங்கும் அனுமதி உள்ளது. கைதிகள் சொந்தப் பணத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
எனது மனுதாரர் பிரபலமானவர் என்பதால், அவருக்கு வீட்டு உணவு அனுமதித்தால் ஏதாவது பிரச்னை ஏற்படும் என்று சிறை அதிகாரிகள் நினைக்கின்றனர். அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவரை நிரபராதியாக கருத வேண்டும். அவருக்கு வீட்டு உணவு, படுக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார்: மனுதாரரின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளோம். அவருக்கு படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தால் எலும்பியல் பிரச்னை உள்ளது. இதற்காக மைசூரில் சிகிச்சை பெற்று வந்தார்.
எலும்பியல் சிகிச்சையை சிறையிலும் தனக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் சிறை உணவு சாப்பிடுவதால் தனக்கு ஒவ்வாமை, உணவே விஷமாக மாறுவதாக கூறவில்லை.
உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வாரத்திற்கு ஒருமுறை முட்டை, வாழைப்பழம் கொடுக்கலாம். தினமும் பிரியாணி சாப்பிட அனுமதிக்க சட்டத்தில் அனுமதி இல்லை.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விஸ்வநாத் கூறியதாவது:
கர்நாடக சிறை திருத்த கையேடு - 2021 திருத்தப்பட்ட பிரிவு - 728ன் படி, சாதாரண வழக்குகளில் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு வீட்டு உணவு வழங்கலாம்.
ஆனால் கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு, வீட்டு சாப்பாடு அனுமதிக்கப்படுவதில்லை. சிறை அதிகாரிகள் கொடுத்துள்ள அறிக்கையிலும் மனுதாரருக்கு வீட்டு உணவு தேவை என்பது குறிப்பிடப்படவில்லை.
மருத்துவ சான்றிதழ்களும் மனுதாரருக்கு வீட்டு உணவு அனுமதிப்பது குறித்து எதுவும் கூறவில்லை. இதனால் மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்ணீர் விட்ட விஜயலட்சுமி
துணை முதல்வர் சிவகுமாரை, தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். 'தர்ஷனை அனைவரும் கைவிட்டு விட்டனர். சட்டத்திற்கு உட்பட்டு அவருக்கு ஜாமின் கிடைக்க ஏதாவது வாய்ப்பு இருந்தால் உதவி செய்யுங்கள்' என்று, சிவகுமாரிடம், விஜயலட்சுமி கண்ணீர் விட்டு அழுததாக தகவல் வெளியாகி உள்ளது. தர்ஷனுக்கு உதவுவது குறித்து முதல்வர் சித்தராமையாவையும், விஜயலட்சுமி சந்தித்து பேசலாம் என்று சொல்லப்படுகிறது.
ரகசிய வாக்குமூலம்
கொலை வழக்கில் கைதாகி உள்ள தர்ஷன் உட்பட 17 பேருக்கு எதிராக போலீசார் வலுவான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். இந்த கொலை வழக்கில், 12 சாட்சிகள், நீதிபதி முன் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். இது இந்த வழக்கின் முக்கிய துருப்பு சீட்டாக பார்க்கப்படுகிறது.
சமரசம் இல்லை
கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் தந்தை காசிநாத் கூறுகையில், ''எனது மகனை இழந்தது இன்னும் வலிக்கிறது. எந்த காரணத்துக்கும் எனது மகனை கொன்ற தர்ஷனுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். இந்த வழக்கில் விசாரணை சிறப்பாக நடக்கிறது. நீதிமன்றம், அரசு, போலீஸ் மீது நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

